பிரித்தானியாவில் எரிசக்திக் கட்டணம் 26 சதவீதம் அதிகரிப்பு!


லண்டன்:
ஈரான் போரினால் சர்வதேசச் சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கான எரிசக்திக் கட்டணங்கள் ஜனவரி மாதம் முதல் 26 சதவீதம் அதிகரிக்கவுள்ளதாக எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமான ஆஃப்ஜெம் (Ofgem) அறிவித்துள்ளது.

இதன்படி, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வழக்கமான அளவில் மின்சாரம் மற்றும் எரிவாயுவைப் பயன்படுத்தி, நேரடிப் பற்றுச் செலுத்தும் முறையில் கட்டணம் செலுத்தும் ஒரு குடும்பத்தின் சராசரி ஆண்டு எரிசக்திக் கட்டணம் 1,723 பவுண்டிலிருந்து 2,166 பவுண்டாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு 443 பவுண்டுகள் மேலதிகச் செலவு ஏற்படும். மாதாந்தம் சராசரியாக 37 பவுண்டுகள் வரை கட்டண உயர்வு ஏற்படுவதுடன், குளிர்காலத்தில் அதிகளவு எரிசக்தியைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மாதாந்தச் செலவு சுமார் 60 பவுண்டுகள் வரை அதிகரிக்கக்கூடும்.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதிக்கான புதிய விலைக் கட்டுப்பாட்டு உச்சவரம்பு, முக்கியமாக ஈரான் போர் காரணமாக சர்வதேசச் சந்தையில் அதிகரித்த மொத்த எரிசக்தி விலைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆஃப்ஜெம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் எரிசக்தி விநியோக நிறுவனங்கள் கொள்முதல் செய்த மொத்த எரிவாயு விலைகள் 33 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், குளிர்காலச் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், ஜனவரி 4ஆம் திகதி முதல் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு அரசாங்கம் தலா 100 பவுண்டுகள் நிதியுதவி வழங்கவுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள மதிப்புக்கூட்டு வரிக் குறைப்புக்கு மேலதிகமாக இந்த உதவி வழங்கப்படவுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் 'வெப்பமான வீட்டுத் தள்ளுபடி' (Warm Home Discount) திட்டத்தின் கீழ், தகுதிபெறும் சுமார் 60 இலட்சம் குடும்பங்களின் எரிசக்திக் கட்டணங்களில் இருந்து 150 பவுண்டுகள் குறைக்கப்படும்.

எனினும், இந்த நிதியுதவிகள் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்காது எனத் தொண்டு நிறுவனங்களும் நுகர்வோர் அமைப்புகளும் எச்சரித்துள்ளன. குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் எரிசக்திக் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் கடன் சுமைக்குள் தள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமக்கள் ஆலோசனை அமைப்பின் தலைமை நிர்வாகி டேம் கிளேர் மோரியார்டி, பிரித்தானியா கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்ளவுள்ளதாகவும், பல குடும்பங்களுக்கு அவசர நிதியுதவி தேவைப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, எரிசக்தி வழங்குநர்கள் நிதி நெருக்கடியில் உள்ள வாடிக்கையாளர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என ஆஃப்ஜெம் அறிவுறுத்தியுள்ளது.

கட்டணங்களைச் செலுத்துவதில் சிரமப்படும் குடும்பங்களுக்கு ஏற்றவாறு திருப்பிச் செலுத்தும் திட்டங்களை உருவாக்கவும், அவற்றை நீண்டகால அடிப்படையில் கட்டுப்படியாகக்கூடிய வகையில் அமைக்கவும் விநியோக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாறுபடும் கட்டணத் திட்டங்களில் உள்ள நுகர்வோருக்கு ஜனவரி முதல் மின்சாரத்தின் சராசரி அலகு விலை ஒரு கிலோவாட் மணிக்கு 26.32 பென்ஸிலிருந்து 32.69 பென்ஸாக அதிகரிக்கும். எரிவாயுவின் அலகு விலை 7.97 பென்ஸிலிருந்து 10.96 பென்ஸாக உயரும்.

முன்கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தும் குடும்பங்களும் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படவுள்ளன. நிலையான விலைக் ஒப்பந்தங்களில் இருப்பவர்கள் ஒப்பந்தக் காலம் முடியும் வரை உடனடியாகப் பாதிக்கப்பட மாட்டார்கள்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வுக்குப் பின்னர், இது மிகப்பெரிய கட்டண அதிகரிப்பாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில், சர்வதேச எண்ணெய் மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் அதிகரித்த விலைகளால் பெரும் இலாபம் ஈட்டுவதாக சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைப் பிரசார அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எனினும், எரிசக்தி விநியோக நிறுவனங்களின் இலாபங்களுக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் உள்ளதாக அவற்றின் பிரதிநிதி அமைப்பான எனர்ஜி யுகே தெரிவித்துள்ளது.

சர்வதேச எரிசக்திச் சந்தையில் அண்மைய நாட்களில் விலைகள் ஓரளவு குறைந்துள்ள போதிலும், ஜனவரி மாதத்திற்கான கட்டண உச்சவரம்பில் அந்த மாற்றத்தின் முழுமையான தாக்கம் உடனடியாகப் பிரதிபலிக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments