உக்ரைனில் நிவாரணப் பொருட்கள் விநியோக மையமாகச் செயல்பட்ட பள்ளி மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல் – 26 பேர் உயிரிழப்பு: ஐந்து பேர் காயம்


தெற்கு உக்ரைனின் சபோரிஷியா பிராந்தியத்தில், மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் விநியோக மையமாகச் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றின் மீது ரஷ்ய விமானப்படை நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

சபோரிஷியா நகருக்கு கிழக்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிலும், போர்முனையிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள கோமிஷுவகா கிராமத்தில் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ரஷ்ய விமானங்கள் 10-க்கும் மேற்பட்ட சறுக்குக் குண்டுகளை வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல்களை முற்றிலும் பயங்கரமானவை என வர்ணித்த உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, அந்த இடம் மனிதாபிமான உதவிகள் வழங்கும் மையமாகச் செயல்பட்டு வந்ததை ரஷ்யா நன்கு அறிந்திருந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

முதல் வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர், மக்கள் தஞ்சமடைந்திருந்த பதுங்குகுழியை இலக்காகக் கொண்டு மேலும் ஒன்பது குண்டுகள் வீசப்பட்டதாகவும், இது இரட்டைத் தாக்குதல் உத்தியாக அமைந்ததாகவும் அவர் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கோமிஷுவகா கிராமத்தில் தங்கியிருந்த உள்ளூர் மக்களுக்கு ஒவ்வொரு வாரமும் அதே இடத்தில் மனிதாபிமான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்ததாகவும், இந்த விடயம் ரஷ்யாவுக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முதலுதவி மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த அவசரகால சேவைக் குழுவின் இரண்டு உறுப்பினர்களும் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக உக்ரைனின் அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன. முதலில் தாக்கப்பட்ட இடத்திற்குச் சென்று உதவி வழங்குபவர்களைக் குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், இரட்டைத் தாக்குதல் குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

இத்தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்னரே, அண்டைப் பிராந்தியமான கெர்சனில் உள்ள ஒலேஷ்கி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஆறு நாள் மனிதாபிமான போர் நிறுத்தம் முடிவடைந்திருந்தது.

ரஷ்யாவின் தொடர்ச்சியான படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான உடன்பாட்டை நோக்கி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம் வழிவகுத்திருக்கக்கூடும் என ஜெலென்ஸ்கி நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால், சபோரிஷியாவில் இடம்பெற்ற தாக்குதல்களுக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், பதற்றத்தைத் தணிப்பதற்கோ அல்லது உண்மையான நீதியை நிலைநாட்டுவதற்கோ ரஷ்யா விரும்பவில்லை என்பதற்கு இந்தத் தாக்குதல் மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்தக் கொலைகள் மூலம் ரஷ்யா எதிர்மறையான சமிக்ஞையை வெளியிட்டுள்ளதுடன், எதிர்காலத்திலும் உயிரிழப்புகள் தொடரும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சபோரிஷியா பிராந்தியமானது கடந்த பல மாதங்களாக ரஷ்யாவின் தொடர்ச்சியான கடுமையான வான்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments