பிரான்ஸில் மாணவர் போராட்டம் தீவிரம் – 48 உயர்நிலைப் பள்ளிகள் முடக்கம்


பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுச் சேவைகளின் குறைபாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் காரணமாக பாரிஸ், ரென்னஸ், துலூஸ் மற்றும் லியோன் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 48 உயர்நிலைப் பள்ளிகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், மாணவர் சங்கமான யூனியன் சிண்டிகேல் லைசென் (USL), சுமார் 500 கல்வி நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதிகாரிகளின் புள்ளிவிவரங்களை மறுத்துள்ளது.

பள்ளிகளுக்கு வெளியே மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கடுமையான காவல்துறை நடவடிக்கைகளுக்கும் கலவரத் தடுப்புப் பிரிவினரின் தலையீட்டுக்கும் மாணவர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாணவர் போராட்டங்களை ஒடுக்குவதற்கும், எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள போராட்ட அணிதிரட்டலைத் தடுப்பதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வடமேற்கு பிரான்ஸின் ரென்னஸ் நகரில் அமைந்துள்ள பிரெக்விக்னி உயர்நிலைப் பள்ளியின் நுழைவுப் பாதையை சுமார் 30 மாணவர்கள் மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போதிய பொதுச் சேவைகள் இல்லாமை மற்றும் கல்வி நிர்வாக நடைமுறைகளில் காணப்படும் குறைபாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த மூன்று வார இறுதி நாட்களாக இடம்பெற்ற போராட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி பிரான்ஸில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட கடுமையான கலவரங்களுக்கும் இந்த இயக்கம் வழிவகுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பெல்ஜியம், இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் இந்த மாணவர் இயக்கத்தின் தாக்கம் பரவியுள்ளது.

மாணவர் சேர்க்கை நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் பிரெஞ்சு அரசாங்கம் கடந்த வாரம் சீர்திருத்த முன்மொழிவுகளை வெளியிட்டிருந்தது. எனினும், அவை போதுமானதாக இல்லை என மாணவர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதுடன், வியாழக்கிழமை மாணவர்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.

No comments