36 வருட காத்திருப்பு: சொந்த மண்ணில் உயிர்விடும் ஆசை நிறைவேறாத நிலையில் தாயாரின் உயிர் பிரிந்தது


பலாலி மண்ணில் தம்மை குடியேற்றுமாறு போராடி வந்த தாயார் ஒருவர் தனது இறுதி ஆசை நிறைவேறாத நிலையில் இறைபாதம் அடைந்துள்ளார். 

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த பலாலி மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். 

தனது மண்ணில் , சொந்த வீட்டிலையே தனது உயிர் போக வேண்டும். சொந்த வீட்டில் இறுதி கிரியைகள் நடைபெற வேண்டும் என்பதே தனது இறுதி ஆசை என கூறி வந்த, தாயாரான, தம்பித்துரை இளையகுட்டி என்பவர் தனது 83ஆவது வயதில்,  வயது மூப்பு காரணமாக  நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார் 

அந்த தாயாரின் இறுதி கிரியைகள் இன்றை தினம் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் தற்காலிகமாக வசித்து வரும் வீட்டில் நடைபெற்று , தகன கிரியைகளுக்காக பலாலி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 

அதன் போது, தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு எடுத்து வரப்பட்டு , அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , இன்றைய தீபாவளி தினமானது தமக்கு "கறுப்பு தீபாவளி" என பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் 

எம்மை எமது சொந்த இடத்தில் மீள்குடியேற்றப்பட்ட பின்னரே எமது சொந்த வீட்டில் தான் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட முடியும். எமது நிலம் இழந்து , வீடிழந்துள்ள நிலையில் எம்மால் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட முடியாது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர் 

யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் , யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள போதிலும் , அந்த பகுதி மக்களின் காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து, இராணுவத்தினரின் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், அப்பகுதி மக்கள்  நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments