16 முன்னாள் அமைச்சர்கள் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டு:


முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் சுமார் 20 அரசியல்வாதிகளுக்கு எதிரான விசாரணைக் கோவைகளைப் பொலிஸ் சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் (CIABOC) ஒப்படைத்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கையில்,

பொலிஸ் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்ட அனைத்து தகவல்களும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 55 இற்கும் அதிகமான அரசியல்வாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தற்போது நேரடி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

மேலும், நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 500 இற்கும் அதிகமானோரின் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்களில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 60 அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.

குறிப்பாக, முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் 16 பேருக்கு எதிராக அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேரடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல அரசியல்வாதிகளும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் அமைச்சர்களின் மனைவிமார் மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட சுமார் 19 பேர் நீதிமன்றங்களினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களின் மூலம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இலஞ்சம் பெறுதல், ஊழல் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைச் சேர்த்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான விசாரணைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments