கென்யாவில் மதப்பிரிவுத் தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
கென்யாவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மதப்பிரிவுத் தலைவர் பால் மெக்கன்சிக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கென்யாவில் குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச் என்ற மத அமைப்பை நடத்தி வந்தவர் பால் மெக்கன்சி. இவர், தனது மத அமைப்பைச் சேர்ந்தவர்களைப் பட்டினி கிடக்கச் செய்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில், ஒரு வயது வந்தவர் மற்றும் 190 குழந்தைகள் என மொத்தம் 191 பேரின் மரணத்திற்குக் காரணமானதாகக் கூறி, கடந்த அக்டோபர் மாதம் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, பட்டினியால் ஏற்பட்ட 183 கொலைகளுக்கு 100 ஆண்டுகளும், நேரடியாகக் கொலை செய்த 8 குற்றங்களுக்கு மேலும் 100 ஆண்டுகளும் என மொத்தம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கென்யாவின் ஷகஹோலா வனப்பகுதியில் நடைபெற்றது. அங்கு சுமார் 400 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத அமைப்பைச் சேர்ந்தவர்களைப் பட்டினி கிடக்கத் தான் கட்டாயப்படுத்தவில்லை என பால் மெக்கன்சி குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.
இந்த வழக்கில் அவருக்கு உதவிய 28 பேருக்கும் வெவ்வேறு சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்களில் மெக்கன்சியின் உதவியாளரான ஸ்மார்ட் மவக்கலாமாவுக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களில் 60-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் இருந்ததால், அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Post a Comment