2,800 ஆண்டுகள் பழமையான கல்லறையில் கஞ்சா கண்டு பிடிப்பு
தெற்கு சைபீரியாவில் சுமார் 2,800 ஆண்டுகள் பழமையான உயர்குடியினரின் கல்லறையில், கஞ்சா பயன்படுத்தப்பட்டதற்கான நேரடி அறிவியல் சான்றுகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட கஞ்சா விதைகள் மற்றும் மனித தலைமுடியில் காணப்பட்ட வேதிப்பொருள் தடயங்கள் மூலம், அக்காலத்தில் கஞ்சா மனோவியல் விளைவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான ஜினோ காஸ்பரி தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். தெற்கு சைபீரியாவின் உயுக் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்தப் பிரம்மாண்டமான கல்லறை, ஆரம்பகால சித்தியன் காலத்தைச் சேர்ந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் குழுவினர், சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முந்தைய பல்வேறு தொல்பொருள் சான்றுகளை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
அந்தக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டவர்கள், குதிரை மீதேறி வில்வித்தையில் ஈடுபடும் திறமைக்காகவும், நேர்த்தியான தங்கப் பொருட்களைப் பயன்படுத்தியதற்காகவும் அறியப்பட்ட நாடோடி குதிரை வீரர்களாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1,400-க்கும் மேற்பட்ட கஞ்சா விதைகள்
கல்லறையில் ஆய்வு மேற்கொண்டபோது, சிறிய கருப்பு நிறப் புள்ளிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அவை கஞ்சா விதைகள் என்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து 1,400-க்கும் மேற்பட்ட கஞ்சா விதைகள் மீட்கப்பட்டன.
அந்த விதிகள் எவ்வளவு பழமையானவை என்பதை உறுதிப்படுத்த ரேடியோகார்பன் காலக்கணிப்பு முறை பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் அவை சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது தெரியவந்தது.
மேலும், அங்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைத்த மனித தலைமுடியையும் ஆய்வாளர்கள் பரிசோதித்தனர். மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி எனப்படும் நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கஞ்சாவின் முக்கிய மனோவியல் வேதிப்பொருளான THC (டெல்டா-9-டெட்ராஹைட்ரோகன்னாபினால்) மற்றும் THC காற்றில் வெளிப்படும்போது உருவாகும் கன்னாபினால் ஆகியவற்றின் தடயங்கள் கண்டறியப்பட்டன.
இதன் மூலம், அந்த நபர் தனது வாழ்நாளில் கஞ்சாவின் மனோவியல் விளைவுகளுக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதற்கான மூலக்கூறு ஆதாரம் கிடைத்துள்ளது.
பழங்காலச் சடங்குகளில் கஞ்சா?
இந்தக் கண்டுபிடிப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஜினோ காஸ்பரி, வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் தாவர அடிப்படையிலான போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகப் பல ஊகங்கள் நிலவி வந்ததாகவும், தற்போது கிடைத்துள்ள சான்றுகள் அந்தக் கருத்துக்கு அறிவியல் அடிப்படையை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
கல்லறையில் கஞ்சா விதைகள் காணப்பட்டிருப்பது, அந்தத் தாவரம் சாதாரண உணவுப் பயன்பாட்டுக்காக மட்டுமன்றி, சடங்கு நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக, அக்கால மக்களின் ஷாமனிச நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளுடன் கஞ்சா பயன்பாடு தொடர்புடையதாக இருந்திருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார்.
அந்தக் கல்லறையில் பல குதிரைகள் பலியிடப்பட்டதற்கான சான்றுகளும், மனிதப் பலி இடம்பெற்றிருக்கக்கூடிய தடயங்களும் கிடைத்துள்ளன. இத்தகைய சடங்குகளில் பலியிடப்படவிருந்தவர்களை மயக்கமடையச் செய்வதற்காகக் கஞ்சா பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியத்தையும் காஸ்பரி முன்வைத்துள்ளார். எனினும், இதனை உறுதிப்படுத்தும் ஆதாரம் தங்களிடம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கஞ்சாவின் பயன்பாட்டு வரலாற்றில் புதிய வெளிச்சம்
கிழக்கு ஆசியாவில் குறைந்தது 6,000 ஆண்டுகளுக்கு முன்பே கஞ்சா பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அப்போது அதன் எண்ணெய் நிறைந்த விதைகளுக்காகவே அது பெரும்பாலும் பயிரிடப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதேவேளை, மனதை மாற்றும் தன்மைக்காகக் கஞ்சா பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் மத்திய ஆசியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து கிடைத்துள்ளன. இந்நிலையில், சைபீரியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய சான்றுகள், யூரேசியப் பிராந்தியத்தில் கஞ்சாவின் மனோவியல் பயன்பாடு அதற்கு முந்தைய காலத்திலேயே இருந்திருக்கலாம் என்பதை வெளிப்படுத்துகின்றன.
இந்த ஆய்வில் பங்கேற்காத இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர்மருத்துவ எகிப்தியவியல் நிபுணர் ரோஜர் ஃபோர்ஷாவும், இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். தலைமுடியில் கண்டறியப்பட்டுள்ள வேதிப்பொருள் தடயங்கள், கஞ்சா பயன்படுத்தப்பட்டதற்கான நேரடி மூலக்கூறு ஆதாரத்தை வழங்குவதாகவும், அது இறுதிச் சடங்குகளின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்ற விளக்கத்துக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கஞ்சா எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, சடங்குகளில் அதன் துல்லியமான பங்கு என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் உறுதியான பதில்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழங்காலக் கஞ்சாவின் டி.என்.ஏ ஆய்வு
இதற்கிடையில், கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட கஞ்சா விதிகளின் பழங்கால டி.என்.ஏ-வை ஆய்வாளர்கள் வரிசைப்படுத்தி வருகின்றனர். தாவர எச்சங்கள் பாதுகாக்கப்படுவதே அரிதான நிலையில், அவற்றின் டி.என்.ஏ பாதுகாக்கப்பட்டிருப்பது இன்னும் அரிதானது என காஸ்பரி தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் முடிவுகள், கஞ்சா எவ்வாறு பழக்கப்படுத்தப்பட்டு பயிரிடப்பட்டது, அதன் வகைகள் எவ்வாறு பரவின, மனித சமூகங்களுடன் அதன் தொடர்பு எவ்வாறு வளர்ந்தது போன்ற கேள்விகளுக்குப் புதிய விளக்கங்களை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஞ்சாவின் சட்டப்பூர்வமாக்கல் மற்றும் மருத்துவப் பயன்பாடு குறித்த உலகளாவிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதன் நீண்டகால கலாச்சார வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த ஆய்வு வியாழக்கிழமை அறிவியல் ஆய்விதழான Science இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment