கந்தரோடையில் புத்தர் இல்லையாம்!



யாழ்ப்பாணம், கந்தரோடை தொல்லியல் பகுதியில் புதிதாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. புpரகாஸ் அறிவித்துள்ளார்.

சுன்னாகம் - கந்தரோடை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் அமைந்துள்ள வளாகத்தில், கடந்த சனிக்கிழமை தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த குழுவினர் புத்தர் சிலை ஒன்றை நிறுவி, 'பிரித்' ஓதி வழிபாடுகளை முன்னெடுத்திருந்தனர். 

எனினும் சனிக்கிழமை இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வுகளுக்காகவே தற்காலிகமாக புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டதாகவும், பூசைகள் நிறைவடைந்த பின்னர் அச்சிலை உடனடியாக அங்கிருந்து மீள எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும் தவிசாளரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளிடம்  பிரதேசசபை தவிசாளர், பிரதேச சபையின் உரிய அனுமதிகள் இன்றி முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் எதிராக நீதிமன்றம் ஊடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திட்டவட்டமாக எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கந்தரோடை பகுதி தொல்லியல் திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன தளமாகும். அப்பகுதியில் உள்ளூர் அதிகார சபைகளின் அனுமதியின்றி புதிய மத அடையாளங்களை அமைப்பதோ அல்லது வழிபாடுகளை முன்னெடுப்பதோ அண்மைக்காலமாக வடபகுதியில் தொடர்ச்சியான சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments