சர்ச்சைகளுக்கு மத்தியில் என்விடியா தலைமைப் பொறுப்பில் மீண்டும் ஜென்சன் ஹுவாங்!


உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகிய ஜென்சன் ஹுவாங், சர்ச்சைகளுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் மத்தியில் மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக அறிவித்திருந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு, பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு அவரை மீண்டும் தலைமைப் பொறுப்பில் அமர்த்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடித் தலையீடு, சிலிக்கான் பள்ளத்தாக்கு முக்கிய தொழில்நுட்பப் பிரமுகர்களின் ஆதரவு, முதலீட்டாளர்களின் அழுத்தம் ஆகியவை இந்தத் தீர்மானத்தின் பின்னணியில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

எனினும், ஹுவாங்கின் மீள் நியமனம் ஒரு நிறுவனத்தின் தலைமை மாற்றம் என்ற எல்லையைத் தாண்டி, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு, சீனாவுடனான தொழில்நுட்பப் போட்டி, செயற்கை நுண்ணறிவுத் துறையின் எதிர்காலம் மற்றும் பெருநிறுவன நிர்வாகத்தின் சுயாதீனம் ஆகிய பல்வேறு விவகாரங்களை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளது.

பதவி விலகல் காரணமான சர்ச்சை

63 வயதான ஜென்சன் ஹுவாங், சீனாவுக்காக உளவு பார்ப்பதாக அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கும் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக வெளியான செய்திகள் காரணமாக கடந்த நவம்பர் 12ஆம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ்பீட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங் என்பவருடனான தொடர்பு இந்தச் சர்ச்சையின் முக்கிய அம்சமாக அமைந்தது. இவர்கள் இருவருக்கும் எந்தவிதமான உறவுமுறையும் இல்லை. என்விடியாவின் பல பில்லியன் டொலர் மதிப்பிலான கணினிச் சில்லுகளை வாங்கிய நிறுவனத்துடன் தொடர்புடையவராக ஆலிஸ் ஹுவாங் இருந்தார்.

அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் ஆலிஸ் ஹுவாங் பெய்ஜிங்கிற்குத் தகவல்களை வழங்கியதாகக் கருதுவதாகச் செய்திகள் வெளியாகின. மேலும், அவர் சீனாவின் உயர்மட்ட உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.

இதனிடையே, என்விடியா நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு நபருடனும் ஹுவாங் தொடர்பு வைத்திருந்ததாக ஊடகச் செய்திகள் வெளிவந்தன. இதனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகளும் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் முழுமையடையாத நிலையில், ஹுவாங் பதவி விலகியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட அதிர்வு

என்விடியா என்பது சாதாரண தொழில்நுட்ப நிறுவனம் அல்ல. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உயர் திறன் கொண்ட கணினிச் சில்லுகளைத் தயாரிப்பதில் உலகளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக அது வளர்ந்துள்ளது.

குறிப்பாக, ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்கள், கிளவுட் கணினி வசதிகள், கணினி விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் என்விடியாவின் GPU எனப்படும் கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

இத்தகைய நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹுவாங் பதவி விலகியமை முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது விலகல் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்ததுடன், செயற்கை நுண்ணறிவுத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மிகப்பெரிய முதலீடுகளின் எதிர்காலம் குறித்த அச்சங்களையும் தூண்டியது.

ஏனெனில், செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்காவின் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தமது எதிர்காலத் திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், என்விடியாவின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றம் ஒட்டுமொத்த தொழில்நுட்பச் சந்தையையும் பாதிக்கக்கூடியதாகக் கருதப்பட்டது.

ஹுவாங்கின் மீள்வருகைக்கான பிரசாரம்

ஹுவாங் பதவி விலகிய சில மணிநேரங்களிலேயே அவரை மீண்டும் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் சிலிக்கான் பள்ளத்தாக்கில் எழத் தொடங்கின.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தொடர்புடைய முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நிர்வாகிகள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், ஹுவாங்கை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான கோரிக்கையை முன்வைத்தபோது, அது தனக்குக் கௌரவமாக இருக்கும் என மஸ்க் குறிப்பிட்டார். பின்னர், இந்தப் பதவி விலகலை மைக்கேல் ஜோர்டானை ஒரு கூடைப்பந்து அணியிலிருந்து வெளியேற்றுவதற்கு ஒப்பிட்டும் கருத்துத் தெரிவித்தார்.

எபிக் கேம்ஸ் தலைவர் டிம் ஸ்வீனி, உபர் நிறுவனத்தின் இணை நிறுவனர் டிராவிஸ் கலானிக், ஒய் காம்பினேட்டர் தலைவர் கேரி டான் உள்ளிட்டோரும் ஹுவாங்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

'ஜென்சனுடன் துணை நில்லுங்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பகிரங்கக் கடிதத்தில், சுயாதீன விசாரணை நிலுவையில் இருக்கும் காலத்தில் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தக் கடிதத்தில் 200,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அவர்களில் என்விடியாவின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் அடங்கியிருந்தனர்.

இதேவேளை, அட்ரைட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த கேவின் பேக்கரும் ஆல்டிமீட்டர் கேப்பிட்டலின் பிராட் கெர்ஸ்ட்னரும் இணைந்து, ஹுவாங் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்பைத் திறந்து வைக்கும் வகையில் தலைமைத்துவத் தேடலை நிதானமாக மேற்கொள்ளுமாறு என்விடியாவின் இயக்குநர் குழுவுக்கு கடிதம் அனுப்பினர். இந்த இரு முதலீட்டு நிறுவனங்களும் இணைந்து பில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான என்விடியா பங்குகளைக் கொண்டிருந்தன.

இவ்வாறு தொழில்நுட்பத் துறையின் முக்கியப் பிரமுகர்களும் முதலீட்டாளர்களும் ஒரே நேரத்தில் ஹுவாங்கின் மீள்வருகைக்காக அழுத்தம் கொடுத்தனர்.

டிரம்பின் நேரடித் தலையீடு

இந்தப் பிரசாரத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவும் கிடைத்தது.

வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பின்னர் ஹுவாங்குடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்ட டிரம்ப், அவரை செயற்கை நுண்ணறிவுத் துறையின் முக்கியமான ஆளுமையாகக் கருதி வந்தார்.

ஹுவாங் டிரம்புடன் வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்றதுடன், சீனாவுக்கான கணினிச் சில்லுகளின் ஏற்றுமதி தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபருடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பெய்ஜிங்கிற்கும் பயணம் செய்திருந்தார்.

இதேவேளை, டிரம்பின் வெள்ளை மாளிகை நடன மண்டபத் திட்டத்துக்கு 25 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கிய நிறுவனங்களில் என்விடியாவும் ஒன்றாக இருந்ததாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், ஹுவாங்கின் மீள்வருகைக்காக டிரம்ப் பகிரங்கமாகக் குரல் கொடுத்தார். வெள்ளிக்கிழமை வெளியிட்ட கருத்தில், ஹுவாங்கை உலகின் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர்களில் ஒருவர் என வர்ணித்ததுடன், அவருக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், என்விடியாவின் இயக்குநர் குழுவுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்ட டிரம்ப், ஹுவாங்கின் மீள் நியமனத்தைச் சரியானதும் முறையானதுமான முடிவு என வரவேற்றார்.

புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் ஜான் எல். தார்ன்டன் சீனா மைய ஆய்வாளர் கைல் சான், டிரம்பின் ஆதரவு செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி அமெரிக்க அதிபரின் பொருளாதார மற்றும் அரசியல் மரபுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

இயக்குநர் குழுவின் முடிவில் ஏற்பட்ட மாற்றம்

ஹுவாங் பதவி விலகியதைத் தொடர்ந்து என்விடியாவின் இயக்குநர் குழு அவரது ராஜினாமாவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டிருந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற வருவாய் தொடர்பான கலந்துரையாடலின்போது, இயக்குநர் குழுத் தலைவர் ஹார்வி ஜோன்ஸ் முதலீட்டாளர்களிடம் இதனைத் தெளிவுபடுத்தியிருந்தார். அப்போது, ஜென்சனை மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கும் எண்ணம் நிறுவனத்திற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், தொழில்நுட்பத் துறையினரின் ஆதரவு, முதலீட்டாளர்களின் அழுத்தம் மற்றும் டிரம்பின் நேரடித் தலையீடு ஆகியவற்றைத் தொடர்ந்து நிலைமை மாறியது.

தொடர்ச்சியான ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின்னர், ஹுவாங்கின் வெளிப்படைத்தன்மை மற்றும் தலைமைத்துவத் திறன் குறித்து திருப்தியடைந்ததாகக் கூறிய இயக்குநர் குழு, அவரை நிறுவனத்தின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர் குழு உறுப்பினராக மீண்டும் நியமிக்க ஒருமனதாகத் தீர்மானித்தது.

அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹுவாங்கின் மீள்வருகை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்தது. எனினும், அந்த அதிகாரிகளின் பெயர்களை நிறுவனம் வெளியிடவில்லை.

இயக்குநர் குழுத் தலைவர் ஹார்வி ஜோன்ஸ், என்விடியாவை வழிநடத்துவதற்குப் பொருத்தமானவர் ஹுவாங்தான் எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து வாரியத் தலைவராகப் பணியாற்றுவார். இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாகச் செயல்பட்ட தலைமை நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் மீண்டும் தனது தலைமை நிதி அதிகாரிப் பொறுப்பைத் தொடர்வார்.

மீண்டும் பொறுப்பேற்ற ஹுவாங், இந்தப் பொறுப்பை மிகுந்த பணிவுடனும் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடனும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கு ஆவலுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசியப் பாதுகாப்பு குறித்த கேள்விகள்

ஹுவாங்கின் மீள் நியமனம் தொழில்நுட்பத் துறையில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அமெரிக்காவின் சீன எதிர்ப்புக் கொள்கையை ஆதரிப்பவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

என்விடியா தயாரிக்கும் உயர் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுச் சில்லுகள் சீன நிறுவனங்களுக்குக் கிடைப்பது அமெரிக்காவின் தொழில்நுட்ப மற்றும் இராணுவப் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையலாம் என்பது அவர்களது முக்கியக் கவலையாகும்.

சீனாவுக்கான சில்லுகளின் ஏற்றுமதியைக் கண்காணிப்பதில் அமெரிக்க வர்த்தகத் துறை போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் சில கடும்போக்காளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கைல் சான் குறிப்பிடுகையில், சீனாவுக்கு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சில்லுகளைப் பெறுவதற்கு வழிவகுப்பதில் என்விடியாவும் ஹுவாங்கும் ஏறக்குறைய துரோகத்தனமான பங்கை ஆற்றியுள்ளதாகச் சீன எதிர்ப்பாளர்கள் கருதுவதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, ஜே. கோல்ட் அசோசியேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கோல்ட், உளவு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முழுமையடைவதற்கு முன்னரே ஹுவாங்கை மீண்டும் நியமித்திருப்பது தவறான முடிவு என விமர்சித்தார்.

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணத்தை இந்த நடவடிக்கை வலுப்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

அதேவேளை, அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவரான ஹக்கீம் ஜெஃப்ரீஸ், இயக்குநர் குழுவின் முடிவை நியாயப்படுத்த முடியாதது, பொறுப்பற்றது மற்றும் புரிந்துகொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டார். என்விடியா நிறுவனம் தொடர்பாக விரைவானதும் முழுமையானதுமான விசாரணையை நடத்துவதிலிருந்து காங்கிரஸ் பின்வாங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

என்விடியா நிறுவனமும் ஹுவாங் வெளிநாட்டு உளவு முயற்சியால் குறிவைக்கப்பட்டாரா என்பது தொடர்பான சுயாதீன விசாரணையைத் தனது இயக்குநர் குழு நிறைவு செய்யும் என அறிவித்துள்ளது. மேலும், ஹுவாங் அமெரிக்கச் சட்டமியற்றுநர்கள் முன்னிலையில் மூடிய அறையில் சாட்சியமளிக்கவும் உள்ளார். ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டை ஏற்கும் காலகட்டத்தில் அவர் மேலதிக அரசியல் மற்றும் சட்டமன்ற ஆய்வுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஒரு புலம்பெயர் இளைஞனின் உலகளாவிய வெற்றி

இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜென்சன் ஹுவாங்கின் வாழ்க்கைப் பயணமும் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.

1963ஆம் ஆண்டு தைவானின் தைப்பேயில் பிறந்த ஹுவாங், தனது சிறுவயதிலேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். ஒன்பது வயதில் தனது சகோதரருடன் கென்டக்கி மாநிலத்திலுள்ள ஒரு உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

அந்தப் பள்ளி ஒரு மதிப்புமிக்க கல்வி நிறுவனம் என அவரது குடும்பத்தினர் நம்பியிருந்தபோதிலும், அது உண்மையில் சிக்கலான பின்னணியைக் கொண்ட இளைஞர்களுக்கான நிறுவனமாக இருந்தது. வயதில் மிகவும் இளையவராக இருந்த ஹுவாங் அங்கு தங்கியிருந்ததுடன், அருகிலுள்ள பொதுப் பள்ளியிலும் கல்வி பயின்றார்.

ஆங்கில மொழியில் போதிய புலமை இல்லாததால் கேலி மற்றும் அவமதிப்புகளையும் எதிர்கொண்டார். சில சமயங்களில் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணிகளையும் செய்ய வேண்டியிருந்தது.

எனினும், அந்த அனுபவங்களைத் தனது வாழ்க்கையின் முக்கியமான பாடங்களாகவே பின்னர் அவர் நினைவுகூர்ந்தார். கடின உழைப்பும் ஒழுக்கமும் தன்னுடைய வளர்ச்சிக்கு உதவியதாக அமெரிக்காவின் தேசியப் பொது வானொலியான NPR-க்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் தனது பெற்றோருடன் இணைந்து ஓரிகானில் வாழ்ந்த அவர், பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்தார். குறைக்கடத்தி மற்றும் கணினிச் சில்லுகள் வடிவமைப்பில் ஆர்வம் கொண்டிருந்த அவர், AMD மற்றும் LSI Logic ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார்.

என்விடியாவின் உருவாக்கமும் வளர்ச்சியும்

கணினித் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து தனக்கிருந்த பார்வையை அடிப்படையாகக் கொண்டு, 1993ஆம் ஆண்டு தனது இரு நண்பர்களுடன் இணைந்து என்விடியாவை நிறுவினார்.

சாதாரண கணினிகளால் தீர்க்க முடியாத சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், முப்பரிமாணக் காட்சிகளை உருவாக்குவதற்கும் அதிக திறனுடைய கணினிச் சில்லுகள் தேவைப்படுவதை அவர் உணர்ந்திருந்தார்.

இதன் விளைவாக, 1999ஆம் ஆண்டு என்விடியா தனது முதல் GPU-வை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் கணினி விளையாட்டுகளுக்கான வரைகலைச் செயலாக்கத்தில் முக்கியத்துவம் பெற்ற இந்தத் தொழில்நுட்பம், பின்னர் தரவு மையங்கள், கிளவுட் கணினி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைகளின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

குறிப்பாக, ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் என்விடியாவின் தயாரிப்புகளுக்கான தேவை மிக வேகமாக அதிகரித்தது. இதன் மூலம் நிறுவனம் உலகின் மிகப் பெறுமதிவாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

நிறுவனத்தில் சுமார் நான்கு சதவீதப் பங்குகளை வைத்திருக்கும் ஹுவாங், என்விடியாவின் வளர்ச்சியின் மூலம் உலகின் மிகப் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்தார். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி அவரது சொத்து மதிப்பு சுமார் 160 பில்லியன் டொலராகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் தோல் ஜாக்கெட் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், தனது உடலில் என்விடியா நிறுவனத்தின் சின்னத்தையும் பச்சைக் குத்தியுள்ளார். விளையாட்டு கார்களிலும் அவருக்கு ஆர்வம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தைவானுக்குச் செல்லும் ஒவ்வொரு பயணத்தின்போதும் பெரும் நட்சத்திரத்தைப் போன்று வரவேற்கப்படும் அவர், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் கையெழுத்திடுவதும் வழக்கமாக உள்ளது. அவரது விருப்பமான உணவகங்கள் மற்றும் இரவுச் சந்தைகளுக்குக்கூட ஊடகவியலாளர்கள் அவரைப் பின்தொடர்கின்றனர்.

எனினும், அவரது நிர்வாகப் பாணி குறித்து சில முன்னாள் ஊழியர்கள் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். தவறுகள் அல்லது மோசமான முடிவுகள் தொடர்பாக ஊழியர்களைக் கடுமையாகச் சாடும் தன்மை அவருக்கு இருப்பதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் வேகம் குறித்த ஹுவாங்கின் பார்வை
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியைத் திட்டமிட்டு மெதுவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஹுவாங் ஏற்கவில்லை. மாறாக, இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் அமெரிக்கா வேகமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என சில தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதன் வளர்ச்சியைத் தடுக்காமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே ஹுவாங்கின் நிலைப்பாடாக உள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா தன்னால் இயன்றவரை வேகமாக முன்னேற வேண்டும் என அவர் செப்டம்பர் மாதம் CBS செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலைப்பாடும் டிரம்ப் நிர்வாகத்தின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை முன்னெடுக்கும் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதாக அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சாம் ஆல்ட்மேன் விவகாரத்தை நினைவூட்டும் மீள் நியமனம்
ஹுவாங்கின் பதவி விலகலும் மீள் நியமனமும் 2023ஆம் ஆண்டு OpenAI நிறுவனத்தில் இடம்பெற்ற சாம் ஆல்ட்மேன் விவகாரத்துடன் ஒப்பிடப்படுகின்றன.

அப்போது OpenAI நிறுவனத்தின் இயக்குநர் குழு, நிர்வாகத்துடன் வெளிப்படையாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சாம் ஆல்ட்மேனைப் பதவியிலிருந்து நீக்கியது.

ஆனால் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் பதவி விலகுவதாக எச்சரித்ததுடன், மைக்ரோசொப்ட் நிறுவனமும் அவரைப் பணியமர்த்த முன்வந்தது. இதனால் ஐந்து நாட்களுக்குள் அவர் மீண்டும் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

இதேபோன்ற சூழல் தற்போது என்விடியாவிலும் ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் அடையாளத்துடனும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் எதிர்காலத்துடனும் ஹுவாங் மிகவும் நெருக்கமாகப் பிணைந்திருப்பதால், அவருடைய விலகல் முதலீட்டாளர்களிடையே நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியதாக ஈமார்க்கெட்டர் ஆய்வாளர் ஜேக்கப் போர்ன் தெரிவித்துள்ளார்.

ஹுவாங்கின் மீள்வருகை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவலாம். எனினும், பெருநிறுவன நிர்வாகத்தில் தனிநபர்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்ற கேள்வியையும் இது எழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1985ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற்றப்பட்ட சம்பவமும் இதனுடன் ஒப்பிடப்படுகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாகக் கழித்து மீண்டும் நிறுவனத்திற்குத் திரும்பிய ஜாப்ஸ், ஆப்பிளை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக மாற்றினார். இதனால் நிறுவனத்தை உருவாக்கிய நிறுவனர்களின் தலைமைத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து சிலிக்கான் பள்ளத்தாக்கில் வலுவாக நிலவுகிறது.

நிறுவனர்கள் மீதான நம்பிக்கையும் முதலீட்டாளர்களின் நலன்களும்
சிலிக்கான் பள்ளத்தாக்கில் 'நிறுவனர் முறை' என அழைக்கப்படும் நிர்வாகக் கருத்து நீண்டகாலமாக நிலவி வருகிறது. நிறுவனத்தை உருவாக்கியவரே அதன் நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்ந்து ஈடுபடும்போது நிறுவனத்தின் நோக்கம், வளர்ச்சி மற்றும் புதுமை ஆகியவற்றைச் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்பது இந்தக் கருத்தின் அடிப்படையாகும்.

ஸ்டீவ் ஜாப்ஸ், எலான் மஸ்க் போன்றவர்கள் இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

ஹுவாங்கின் மீள்வருகைக்காகத் தொழில்நுட்பத் துறையினர் மேற்கொண்ட பிரசாரமும் இதே கருத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. அவரை என்விடியாவிலிருந்து பிரிப்பது நிறுவனத்தின் அடையாளத்தையும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியையும் பாதிக்கும் என அவர்கள் கருதினர்.

மறுபுறத்தில், என்விடியாவின் வணிக மாதிரியும் ஹுவாங்கின் தலைமைத்துவத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இயங்கும் தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் கிளவுட் சேவை வழங்குநர்களில் முதலீடு செய்வதுடன், அவற்றின் தரவு மைய ஒப்பந்தங்களுக்கும் என்விடியா ஆதரவளித்து வந்துள்ளது.

இதனால் என்விடியாவின் தயாரிப்புகளை வாங்கும் நிறுவனங்களுக்கும் என்விடியாவுக்கும் இடையில் பரந்த வணிக வலைப்பின்னல் உருவாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்களில் பலவற்றில் ஹுவாங்கின் தனிப்பட்ட தலைமைத்துவமும் பேச்சுவார்த்தைத் திறனும் முக்கியப் பங்கு வகித்ததாகத் தொழில்நுட்பத் துறையினர் கூறுகின்றனர்.

எனவே, அவரை மீண்டும் தலைமைப் பொறுப்பில் அமர்த்துவது ஒரு தனிநபரின் மீள்வருகையாக மட்டுமல்லாமல், என்விடியாவின் வணிக வலைப்பின்னலைத் தொடர்ந்து ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் காத்திருக்கும் சவால்கள்

ஹுவாங் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் முடிவுக்கு வந்துவிடவில்லை.

ஆலிஸ் ஹுவாங் தொடர்பான உளவு குற்றச்சாட்டுகள், சீனாவுக்கான மேம்பட்ட கணினிச் சில்லுகளின் ஏற்றுமதி, அமெரிக்க அரசாங்கத்தின் கண்காணிப்பு நடைமுறைகள், என்விடியாவின் வணிக நலன்கள் ஆகியவை தொடர்ந்து விசாரணைக்கும் அரசியல் விவாதங்களுக்கும் உட்படவுள்ளன.

மேலும், அமெரிக்கக் காங்கிரஸின் விசாரணைகள் மற்றும் சுயாதீன இயக்குநர் குழுவின் ஆய்வு ஆகியவை ஹுவாங்கின் எதிர்கால நிர்வாகத்திற்கும் நிறுவனத்தின் நற்பெயருக்கும் முக்கியமானவையாக அமையக்கூடும்.

என்விடியா நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அதன் தலைமைத்துவம் தொடர்பான எந்தவொரு சர்ச்சையும் உலகளாவிய தொழில்நுட்பச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜென்சன் ஹுவாங்கின் வாழ்க்கை, புலம்பெயர்ந்த சிறுவன் ஒருவன் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றை உருவாக்கிய வெற்றிக் கதையாகத் திகழ்கிறது. அதேவேளை, அவரது தற்போதைய மீள்வருகை, தொழில்நுட்ப உலகில் தனிநபர் செல்வாக்கு, அரசியல் அதிகாரம், முதலீட்டாளர்களின் நலன்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகியவை எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

எனவே, ஹுவாங்கின் மீள் நியமனம் என்விடியாவுக்கு நிர்வாக ரீதியான ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும், அவரைச் சுற்றியுள்ள அரசியல், பாதுகாப்பு மற்றும் நிறுவன நிர்வாகக் கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் வெளிவர வேண்டியுள்ளது.

No comments