சுரேஸ் சாலேயுடன் அசாத் ஹோட்டலில்!



உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணையின் போது சுரேஸ் சலே மற்றும்  அசாத் மௌலானா ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை உறுதி; செய்யப்பட்டுள்ளது.இதனிடையே கோட்டாபய ராஜபக்சவைச் சந்தேகநபராகப் பெயரிடப் போதிய சான்றுகள் உள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் தகவல வெளியிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மறைத்தமை மற்றும் விசாரணைகளைத் திசைதிருப்பியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் கண்டறியப்பட்ட புதிய தகவல்களைச் சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

அசாத் மௌலானாவும், சுரேஸ் சலேவும் தங்களது குடும்பத்தினருடன் 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் அ{ஹங்கல்லவிலுள்ள ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பு தற்செயலாக இடம்பெற்றது எனச் சுரேஸ் சலே ஆரம்பத்தில் கூறியபோதிலும், தொலைபேசிப் பதிவுகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. சந்தர்ப்பச் சூழ்நிலைச் சான்றுகள், அசாத் மௌலானா முன்வைத்த சில குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே சஹ்ரான் ஹாசிம் தொடர்பான தகவல்களை ‘தம்பி அண்ணா’ என அறியப்பட்ட உளவாளி ஒருவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கியிருந்ததாகவும், எனினும் சுரேஸ் சலேவின் அறிவுறுத்தலுடன் குறித்த கோப்பு மறைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இவ்விவகாரத்தில் சந்தேகநபராகப் பெயரிடுவதற்குத் தமது அபிப்பிராயத்தின்படி போதிய சான்றுகள் உள்ளதாகவும், எனினும் அவரைக் கைது செய்வது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் விசாரணை அதிகாரிகளின் கைகளிலேயே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.   

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கு அமைய, தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை மனுவொன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   


No comments