கந்தரோடையில் பிரதேச சபை அனுமதியின்றிச் செயல்பட்டால் சட்ட நடவடிக்கை: தவிசாளர் எச்சரிக்கை!


யாழ்ப்பாணம் கந்தரோடையில் தொல்லியல் திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீள எடுத்து செல்லப்பட்டுள்ளதாக , வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளர் தி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

 சுன்னாகம் கந்தரோடை பகுதியில் புராதன பௌத்த சின்னங்கள் காணப்படும் பகுதியில் கடந்த சனிக்கிழமை தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட பௌத்தர்கள் புத்தர் சிலை ஒன்றினை அங்கு வைத்து வழிபாடுகளை மேற்கொண்டதுடன் , "பிரித்" ஓதி மத சடங்குகளிலும் ஈடுபட்டனர். 

குறித்த சம்பவமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் , அப்பகுதி மக்கள் மத்தியில் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருந்தன. 

இந்நிலையில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வலி.தெற்கு பிரதே சபையின் தவிசாளர் தி.பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்ட போது , அன்றைய தினம் சனிக்கிழமை வழிபாட்டிற்காகவே அங்கு புத்தர் சிலை வைக்கப்பட்டது என்றும் , அது நிரந்தரமாக வைக்கப்படவில்லை, வழிபாட்டு நிகழ்வுகள் முடிவடைந்ததும் , அந்த புத்தர் சிலை மீள எடுத்து செல்லப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது. 

அதன் பின்னர் அப்பகுதியில் கடமையில் இருந்த தொல்லியல் திணைக்களத்தினருடனும் , தவிசாளர் , அன்றைய சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் , பிரதேச சபையின் அனுமதிகள் இன்றி முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கைகளை பிரதேச சபை எடுக்கும் என கூறியிருந்தார்.


No comments