பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 1,300 பேருக்கு 800 மில்லியன் டாலர் இழப்பீடு


கத்தோலிக்க மதகுருக்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சுமார் 1,300 பேருக்கு 800 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்குவதற்கு நியூயார்க் பேராயம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த வழக்குகளுக்கு முடிவு ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் சனிக்கிழமை அறிவித்தனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கும் குறைந்தபட்சம் 250,000 டாலர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வன்கொடுமையின் தீவிரத்தைப் பொறுத்து சிலருக்கு அதிக தொகையும் வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ஜெஃப் ஆண்டர்சன், இந்த ஒப்பந்தம் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான முக்கியமான நடவடிக்கை என்று குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களின் துணிச்சலும் விடாமுயற்சியும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த உதவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நியூயார்க் பேராயர் ரொனால்ட் ஹிக்ஸ், இந்த ஒப்பந்தம் பாதிக்கப்பட்டவர்கள் ஓரளவுக்காவது மனநிம்மதி பெறவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் உதவும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பேராயம் தனது மத மற்றும் சமூகப் பணிகளில் மீண்டும் கவனம் செலுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்னர், முன்னாள் பேராயர் திமோதி டோலன், பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 300 மில்லியன் டாலர் நிதியை உருவாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியிருந்தார்.

அமெரிக்காவில் மதகுருமார்களின் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் வழங்கப்படும் மிகப்பெரிய இழப்பீடுகளில் ஒன்றாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது. 2024ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் பேராயம் எட்டிய 880 மில்லியன் டாலர் இழப்பீட்டு ஒப்பந்தம் இதைவிடப் பெரியதாகும்.

No comments