கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் வர்த்தக ஒருவர் கைது!
3 கோடி 65 இலட்சத்து 19 ஆயிரத்து 192 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைச் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கடத்தி வந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற வர்த்தக ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (03) காலை வேளையில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் கண்டி, பல்லேகலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
இவர் நேற்று காலை 09.30 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 இலக்க விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, 996 கிராம் எடையுடைய குறித்த தங்க நகைகளை 04 பொதிகளாக தயாரித்துத் தனது உடலில் மறைத்து வைத்து எடுத்துவர முயன்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட பயணியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை 04.45 மணி வரை முறையான சுங்க விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், விசாரணையின் முடிவில், கடத்தி வரப்பட்ட தங்க நகைகள் முழுவதையும் அரசுடைமையாக்குமாறும், குற்றவாளியான பயணிக்கு 37 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் சுங்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


Post a Comment