தென்கொரியாவில் ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் தேர்வு மோசடி செய்தால் குற்றவியல் நடவடிக்கை!
முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தேர்வெழுதத் தடை. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை
தென்கொரியாவின் தேசிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், இத்தகைய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி தேர்வு மோசடியில் ஈடுபடுவோருக்கான தண்டனைகளையும் கடுமையாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்த தென்கொரிய கல்வி அமைச்சக அதிகாரி லீ ஜூன்-ஹ்யுக், ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தி தேர்வுகளில் மோசடி செய்யும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள ஓராண்டுத் தேர்வுத் தடையை மூன்று ஆண்டுகளாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்வதுடன், செயற்கை நுண்ணறிவு உதவியாளர்களுடன் உரையாடவும், தகவல்களைப் பெறவும் வசதியளிக்கும் ஸ்மார்ட் கண்ணாடிகளின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகின்றது.
எனினும், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றிப் படம்பிடித்தல், தனியுரிமை மீறல் மற்றும் கல்வித் தேர்வுகளில் முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்படுதல் போன்ற பிரச்சினைகள் தொடர்பாகப் பல்வேறு நாடுகளிலும் கவலைகள் எழுந்துள்ளன.
தென்கொரியாவில் 'சுனங்' எனப்படும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்னணி பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான வாய்ப்பைத் தீர்மானிப்பதுடன், எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் சமூக அந்தஸ்திலும் இந்தத் தேர்வு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இந்நிலையில், சியோலில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி நிறுவனங்களால் நடத்தப்பட்ட கட்டுரைத் தேர்வுகளின்போது மூன்று மாணவர்கள் ஸ்மார்ட் கண்ணாடிகளை அணிந்திருந்த அல்லது வைத்திருந்த நிலையில் பிடிபட்டதைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
எனினும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பில்லை என லீ ஜூன்-ஹ்யுக் தெரிவித்துள்ளார்.
தேர்வுக்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில், அதற்குள் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், அடுத்த ஆண்டு முதல் புதிய விதிகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முறைகேடுகளைக் கண்டறிவதற்காக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் விசேடமாக நியமிக்கப்பட்ட கண்காணிப்புப் பணியாளர் ஒருவரை அமர்த்தவும் தென்கொரிய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதேபோன்ற சம்பவம் தைவானிலும் பதிவாகியுள்ளது. தைபேயில் உள்ள தேசிய தைவான் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் செயற்கை நுண்ணறிவு வசதியுடைய ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் கூறப்படும் மாணவர் ஒருவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தென்கொரியாவில் நடைபெறும் சுனங் தேர்வின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், ஆங்கிலக் கேட்டல் பரீட்சை நடைபெறும் 35 நிமிடங்களின்போது அவசரகாலத் தேவைகளைத் தவிர நாடு முழுவதும் விமானப் பயணங்கள் தற்காலிகமாகத் தடை செய்யப்படுகின்றன.
மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வங்கிகள் மற்றும் அரச அலுவலகங்கள் தமது பணியாளர்களைப் வழக்கத்தைவிட ஒரு மணித்தியாலம் தாமதமாகப் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகின்றன.
இதேவேளை, தென்கொரியாவின் கடுமையான போட்டி நிறைந்த கல்வி முறை மாணவர்கள் மீது பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், இத்தகைய அழுத்தம் பதின்ம வயதினரின் மனநலப் பிரச்சினைகள் மற்றும் தற்கொலை அபாயத்துடன் தொடர்புடைய காரணிகளில் ஒன்றாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Post a Comment