எரிபொருள் விலை உயர்வு: ஜெர்மனி, பிரான்ஸ் அவசர கையிருப்பை வெளியிட அமெரிக்கா கோரிக்கை


வாஷிங்டன்: சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் தங்களிடம் உள்ள மூலோபாய டீசல் கையிருப்பை உடனடியாக வெளியிடுமாறு அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளான ஜெர்மனி மற்றும் பிரான்சிடம் கோரியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைத் தடுக்கும் நோக்கில் டீசல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு அல்லது தடை விதிக்கும் சாத்தியம் குறித்து தெரிவித்த மறுநாளே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி பணிக்குழு வெள்ளிக்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்தியது. அமெரிக்கா டீசல் ஏற்றுமதியைத் தடை செய்யக்கூடும் என்ற அச்சுறுத்தல், அமெரிக்கா மீதான நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், அத்தகைய நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

AAA மோட்டார் கிளப்பின் தரவுகளின்படி, ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் சராசரி டீசல் விலை 70 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு கேலன் டீசலின் சராசரி விலை தற்போது 6.39 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை உயர்வு அமெரிக்கப் பொதுமக்களிடையே அதிருப்தியை அதிகரித்துள்ளதாகவும், நவம்பர் மாத இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்டுப்பாட்டை இழக்க நேரிடுமோ என்ற கவலை குடியரசுக் கட்சிக்குள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜெர்மனியில் விலை உயர்வின் தாக்கமும் தொடர்கிறது. ஜெர்மனியின் ADAC வாகன ஓட்டுநர் சங்கத்தின் தகவலின்படி, வியாழக்கிழமை ஒரு லிட்டர் டீசலின் சராசரி விலை 2.409 யூரோவாக இருந்தது.

உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எரிபொருள் கொள்கைகளுக்கு இடையிலான முரண்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

No comments