பூட்ஸ் நிறுவனம் கனேடிய பணக்காரரின் வசம்: £6.7 பில்லியனுக்கு விற்கப்பட்டது
பிரிட்டனின் மிகப் பழமையானதும் பரவலாக அறியப்பட்டதுமான மருந்தகம் மற்றும் சில்லறை விற்பனைத் தொடரான பூட்ஸ், கனடாவின் கோடீஸ்வர வெஸ்டன் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்லவுள்ளது. சுமார் 8.9 பில்லியன் அமெரிக்க டாலர் (£6.7 பில்லியன்) மதிப்பிலான இந்த ஒப்பந்தம், பிரிட்டனின் பிரதான வீதி சில்லறை வர்த்தகத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.
வெஸ்டன் குடும்பத்தின் ஹோல்டிங் நிறுவனமான விட்டிங்டன் இன்வெஸ்ட்மென்ட்ஸ், அமெரிக்க தனியார் பங்கு நிறுவனமான சைகமோர் பார்ட்னர்ஸ் மற்றும் ஸ்டெஃபானோ பெசினா குடும்பத்தினரிடமிருந்து பூட்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக நேற்றுப் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
177 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட பூட்ஸ், 1849ஆம் ஆண்டு நொட்டிங்ஹாமில் ஜான் பூட் தொடங்கிய சிறிய மூலிகைக் கடையிலிருந்து வளர்ந்து. இன்று பிரிட்டனின் பிரதான வீதிகளில் அடையாளமாகத் திகழும் மிகப்பெரிய சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
ஆரம்பத்தில் பாரம்பரிய மருந்துகளுக்கு மலிவான மாற்றுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்த நிறுவனம், காலப்போக்கில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியது. தற்போது மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுடன் அழகு சாதனங்கள், உணவுப் பொருட்கள், பயணப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் விற்பனை செய்கிறது.
சில்லறைத் துறையின் மாற்றங்களுக்கு மத்தியில் பூட்ஸ்
கடந்த சில ஆண்டுகளில் பிரிட்டனின் சில்லறை விற்பனைச் சூழல் கணிசமாக மாறியுள்ளது. இணையவழி கொள்முதல் அதிகரித்ததும், நுகர்வோரின் வாங்கும் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களும் பாரம்பரிய பிரதான வீதி கடைகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறை அதிகரித்ததால் நகர மற்றும் மாநகர மையங்களில் உள்ள கடைகளுக்கான வாடிக்கையாளர் வருகை குறைந்தது. இதன் தாக்கம் பூட்ஸ் நிறுவனத்தையும் பாதித்தது.
இதன் விளைவாக, நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளை மூடியுள்ளது. தற்போது சுமார் 1,800 கடைகளும் 51,000 ஊழியர்களும் பூட்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளனர்.
இருப்பினும், கடைகளின் எண்ணிக்கை குறைந்த நிலையிலும், பிரிட்டிஷ் நுகர்வோரிடையே வலுவான அடையாளத்தைக் கொண்ட நிறுவனமாக பூட்ஸ் தொடர்கிறது.
நிறுவனத்தின் சமீபத்திய ஆண்டு முடிவுகளின்படி, அதன் விற்பனை £7.5 பில்லியனை எட்டியுள்ளது. இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.2% அதிகரிப்பு ஆகும்.
சுகாதார சேவையில் பூட்ஸின் பங்கு
பூட்ஸ் ஒரு சாதாரண சில்லறை விற்பனை நிறுவனமாக மட்டுமல்லாமல், பிரிட்டனின் சமூக சுகாதார அமைப்பிலும் நீண்டகாலமாக முக்கிய பங்கு வகித்து வருகிறது.
மருந்து விநியோகத்துடன் தடுப்பூசிகள், கண் பரிசோதனைகள் மற்றும் செவித்திறன் பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார சேவைகளையும் நிறுவனம் வழங்குகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று போன்ற தேசிய அளவிலான சுகாதார நெருக்கடிகளின்போதும் அதன் கிளைகள் பொதுமக்களுக்கு முக்கிய சேவைகளை வழங்கின.
1997ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Advantage Card வாடிக்கையாளர் விசுவாசத் திட்டமும் பூட்ஸின் முக்கிய வணிக முயற்சிகளில் ஒன்றாகும். பின்னர் இதுபோன்ற விசுவாசத் திட்டங்களை பல சில்லறை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின.
புதிய உரிமையாளர்களின் திட்டம்
விட்டிங்டன் இன்வெஸ்ட்மென்ட்ஸின் தலைவர் கேலன் வெஸ்டன், புதிய உரிமையின் கீழ் பூட்ஸ் நிறுவனத்தில் நீண்டகால முதலீட்டையும் செயல்பாட்டு மேம்பாட்டையும் மேற்கொள்ளும் திட்டம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடைகளை நவீனப்படுத்துதல், சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் புதிய கவனம் செலுத்துதல் ஆகியவை எதிர்காலத் திட்டங்களில் அடங்குகின்றன.
நிலையான நீண்ட கால உரிமை, மேலதிக மூலதன முதலீடு மற்றும் புதுப்பிக்கப்பட்ட செயல்பாட்டுக் கவனம் ஆகியவற்றின் மூலம் பூட்ஸ் நிறுவனத்தை மேலும் வளர்க்க முடியும் என்று கேலன் வெஸ்டன் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள பூட்ஸ் சில்லறை விற்பனைப் பிரிவுகள், Boots Opticians, No7 Beauty Company மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட உரிமம் பெற்ற வணிகங்களும் வெஸ்டன் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும். பரிவர்த்தனை 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்டன் குடும்பத்தின் சில்லறை வணிகப் பேரரசு
கனடாவைச் சேர்ந்த வெஸ்டன் குடும்பம் ஏற்கனவே மிகப்பெரிய சில்லறை மற்றும் உணவு வணிகச் சொத்துகளைக் கொண்டுள்ளது. கனடாவின் Loblaw மளிகைக் கடைத் தொடரும் Shoppers Drug Mart மருந்தக வணிகமும் குடும்பத்தின் முக்கிய சொத்துகளில் அடங்குகின்றன.
குடும்பம் முன்னதாக லண்டனின் பிரபலமான Selfridges பல்பொருள் அங்காடியையும் 2003 முதல் 2021 வரை வைத்திருந்தது. பின்னர் அது சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் விற்கப்பட்டது.
வெஸ்டன் குடும்பத்துடன் தொடர்புடைய பிரிட்டிஷ் வணிகப் பிரிவு, Primark-ன் தாய் நிறுவனமான Associated British Foods-இன் பெரும்பான்மை உரிமையாளராகவும் உள்ளது.
இந்த ஆண்டு Sunday Times Rich List பட்டியலில் வெஸ்டன் குடும்பம் சுமார் £19 பில்லியன் ஒருங்கிணைந்த சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் இடம்பெற்றது.
டொராண்டோவைத் தளமாகக் கொண்ட Fairfax Financial Holdings உடன் இணைந்து பூட்ஸ் நிறுவனத்தைப் பெறும் விட்டிங்டன் இன்வெஸ்ட்மென்ட்ஸ், நிறுவனத்தின் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளும்.
அதேவேளை, சைகமோர் பார்ட்னர்ஸ் மற்றும் ஸ்டெஃபானோ பெசினா குடும்பம், மெக்சிகோவில் உள்ள Farmacias Benavides மற்றும் ஜெர்மனியில் உள்ள Alliance Healthcare Deutschland ஆகிய வணிகங்களின் உரிமையைத் தொடர்ந்து வைத்திருக்கும்.
பூட்ஸ் நிறுவனத்தின் அடுத்த கட்டம், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிட்டிஷ் பிராண்டை புதிய முதலீடு, மாறிவரும் நுகர்வோர் பழக்கங்கள் மற்றும் டிஜிட்டல் சில்லறை வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்ப மாற்றியமைப்பதில் அமையும்.

Post a Comment