அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் கையெழுத்து சேகரிப்பும் உணவுத் தவிர்விப் போராட்டமும் முன்னெடுப்பு


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை 09 மணியளவில் அமைதிவழி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனோஜனின் விடுதலைக்காக இலங்கை அரசும், மூவின சமூகமும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனோஜனுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்குமாறு இலங்கை அரசாங்கம் மற்றும் சவூதி அரேபிய அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி பொதுமக்களிடம் ஆதரவு கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சேகரிக்கப்படும் கையெழுத்துகளை ஜனாதிபதி ஊடாகவும், பல்வேறு அமைப்புகள் ஊடாகவும் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் சமர்ப்பித்து, அனோஜனின் விடுதலைக்கு கோரிக்கை விடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொதுமக்கள் தன்னார்வமாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து அனோஜனுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு வருகின்றனர்.

அனோஜனின் விடுதலைக்காக பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், இந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments