துப்பாக்கி முனைகளே மன்னிப்பை எழுத வைக்கின்றன!
தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில் அது தமிழ் - சிங்கள கலவரமாக விஸ்வரூபம் எடுத்தது. எனவே, கறுப்பு ஜூலை சம்பவத்துக்குச் சிங்கள இனத்தவர் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
"1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் வெடித்தபோது எனக்கு 14 வயது. அந்த இக்கட்டான காலகட்டத்தில் எனது தந்தை பெருமளவிலான தமிழ் மக்களை எமது வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு உணவளித்துப் பாதுகாத்தார். அந்தத் துயரமான நிகழ்வுகளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
தமிழ் மக்களின் பொருளாதாரத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் உருவாக்கப்பட்டது. எனினும், இறுதியில் அந்தக் கலவரம் தமிழ் - சிங்கள மக்களுக்கிடையேயான மோதலாக மாறியது. இதன் நேரடி விளைவாகவே விடுதலைப் புலிகள் அமைப்பு மேலும் பலம்பெற்றதுடன், பெருமளவிலான தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாட்டில் 30 வருட கால கொடூர யுத்தம் தோற்றம் பெற்றதுடன், ஒட்டுமொத்த நாடும் சீரழிந்து போனது;
இதன் பொருளாதார மற்றும் சமூகத் தாக்கங்கள் இன்றும் தொடர்கின்றன. 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரத்தைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். தாய்நாட்டைத் துறந்து சென்றோரின் பிள்ளைகள் இன்று இலங்கை தொடர்பில் நல்லதொரு நிலைப்பாட்டில் இல்லை. ஏனெனில், அந்த வடுக்களும் வேதனைகளும் இன்றும் அவர்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளன.
கறுப்பு ஜூலை சம்பவத்தின் எதிர்விளைவுகள் இன்றும் சமூகத்தில் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இவ்வாறான சோகமான நிலைமைகள் எக்காரணம் கொண்டும் எமது நாட்டில் மீண்டும் ஏற்படக் கூடாது. அதற்காக நாம் அனைவரும் கட்சி பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அத்துடன், கறுப்பு ஜூலை சம்பவத்துக்குச் சிங்கள இனத்தவர் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன்" என்றார்.

Post a Comment