காவியுடைக்கு வெள்யைடிக்கும் ரணில்!



நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்ட போது  சீருடை களையப்பட்டிருந்தால், அதற்கான பழி முழுவதும் எம்மீதே விழுந்திருக்கும். எனவேதான், அரசியலமைப்பின் 9-ஆவது பிரிவின் கீழ் மன்னிப்பளிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் , அவரது துறவறச் சீருடை ) களையப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முன்னதாக, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்து, நீதிமன்றக் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலேயே அப்போதைய நீதவான் ரங்க திசாநாயக்க நடவடிக்கை எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை விதித்தது.

ஒரு வருடம் கடந்த நிலையில், சில மகா சங்கத்தினர் என்னைச் சந்தித்து, 'ஞானசார தேரர் தொடர்ந்து எமது மதக் கடமைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. தவிர, குற்றவியல் வழக்குகளின் போதே துறவறச் சீருட களையப்படும். ‘பாராஜிகா’ நிலைமைக்கு (வினய பிடக விதிகளின்படி முழுமையாகத் துறவறத்தை இழக்கும் பெருங்குற்றம்) உட்படும்போதே சீருடையை அகற்ற முடியும். ஆனால், நீதிமன்றத்திற்கு இடையூறு விளைவிப்பதும் அவமதிப்பதும் உண்மையிலேயே பாராஜிகா செயல் அல்ல' எனக் கூறினர்.


மேலும் மகா சங்கத்தினர் சுட்டிக்காட்டுகையில், 'பொதுவாக இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றால், குறித்த பிக்குவை அழைத்து அறிவுறுத்தி, உரிய நிகாய (பிரிவு) அல்லது காரக சபையின் ஊடாகப் பாவனைக்காக அல்லது தியானத்திற்காகக் கால அவகாசம் வழங்குவதே வழக்கம். பாராஜிகா அல்லாத ஒரு விடயத்திற்காகச் சீருடை களையப்பட்டால், அது பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும். மேலும், அரசியல் அமைப்பின் 9-ஆவது பிரிவிற்கு அது முரணானது. பௌத்த மதத்தைப் பாதுகாத்தல் என இருந்த பிரிவை, 1972 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்த்தன 'பௌத்த சாசனம்' எனத் திருத்தியமைத்தார்' என்பதையும் நினைவூட்டினர்.


இதன்போது நான், பௌத்த மதம் மற்றும் பௌத்த சாசனம் தொடர்பாக இங்கு ஒரு சிக்கல் நிலை எழுந்துள்ளதால், இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசுமாறு கூறினேன். ஏனெனில், ஜனாதிபதி என்ற ரீதியில் அவரிடமே அதற்கான பொறுப்பு காணப்பட்டது. அதற்கமைய, அவர்களும் சென்று ஜனாதிபதியுடன் பேசினர். எமக்கிடையிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.


ஒரு வருடம் கழிந்த நிலையில், 'தேரரின் சீருடையைக் களைந்து சிறைக்கு அனுப்புவதா? அல்லது ஒரு வருட தண்டனைக் காலத்தைக் கழித்துவிட்டதால் மன்னிப்பளித்து விடுவிப்பதா?' என்ற கேள்வி எழுந்தது. பிக்குவை எப்போதும் இதே நிலையில் வைத்திருக்க முடியாது; யாராவது இதைக் கேள்விக்குட்படுத்தக்கூடும்.


'ஒரு வருடம் கழிந்துவிட்டதால், மன்னிப்பளித்து விடுவிப்போம்' என்பதே அப்போதைய ஜனாதிபதியின் தீர்மானமாக இருந்தது. அதற்கமையவே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இது குறித்து அமைச்சரவையிலும் பேசப்பட்டது. பிரதமராக இருந்த நானும் ஏனைய அமைச்சர்களுடன் கலந்துரையாடி, 'இவ்வாறே இதனை செய்ய வேண்டும்' எனக் கூறினேன். சிறையிலிருந்தபோது சீருடை களையப்பட்டிருந்தால், அதற்கான பழி முழுவதும் எம்மீதே விழுந்திருக்கும். எனவேதான், அரசியலமைப்பின் 9-ஆவது பிரிவின் கீழ் மன்னிப்பளிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.


நான் தனிப்பட்ட ரீதியில் எவருக்கும் மன்னிப்பளிக்கவில்லை. பொதுவாக சுதந்திர தினம், வைகாசி விசாக தினம் (வெசாக்) போன்ற நாட்களில் கைதிகளின் தண்டனைக் குறைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். அதற்குப் பிரத்தியேக காரணங்கள் எழுதப்படுவதில்லை. அமைச்சரவைச் செயலாளரிடம் நான் வாய்மொழியாகவே கூறினேனே தவிர, எதனையும் எழுதி வழங்கவில்லை. மேனாட்டு நாடுகளைப் போலன்றி, எமது நாட்டில் பெரும்பாலான விடயங்கள் செயலாளருடன் தொலைபேசி வாயிலாகவே பேசப்படுகின்றன. தற்போதைய நவீன சூழலில் மின்னஞ்சல் (E-mail) மூலம் தொடர்புகொள்ளும்போது பதிவுகளைப் (Minutes) பேணுவது சவாலான காரியமாகும்.


இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் இங்கு வினவப்பட்டது. இந்தியாவில் தலைமை நீதிபதியை 'தலித்' எனக் சாதியைச் சுட்டிக்காட்டி இழிவுபடுத்தியே காலணியால் அடித்தனர். இந்தியாவில் இவ்வாறான சம்பவங்களின்போது அறிவுறுத்தப்படுவார்கள்; அல்லது ஒரு மாதம் வரை வைத்திருக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள்.


ஞானசார தேரருக்குத் தண்டனை வழங்கப்பட்டமை மத ரீதியான பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. ஆனால், அதன்பின்னர் எழுந்த கேள்வி என்னவெனில், 'விநய முறைகளை மீறிச் சீருடையைக் களைவதா அல்லது விநய முறைகளைப் பாதுகாத்து விடுவிப்பதா?' என்பதாகும். இது ஒரு மதச் சிக்கலாக மாறியது. இங்கு பௌத்தர்களின் பெரும்பான்மைக் கருத்தே வெளிப்பட்டது. நிலைமை இவ்வாறிருக்க, இதற்கு எதிராகச் சிவில் உரிமைகள் அமைப்பு (CPA) எவ்வாறு நீதிமன்றம் செல்ல முடியும்? இவற்றுக்கு எம்மால் ஆதரவளிக்க முடியாது.


அவருக்குத் தண்டனை வழங்கப்படாமலிருந்தாலோ அல்லது தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றே மன்னிப்பு அளிக்கப்பட்டிருந்தாலோ நிலைமை வேறாக இருந்திருக்கும். ஆனால், இதன் பின்னர் உருவானது மதச் சட்டங்கள் மற்றும் 'விநய பிடக' விதிகளுடனான சிக்கலாகும்" என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

No comments