நைஜீரியாவில் இராணுவ விமானம் விபத்து – 25 பேர் உயிரிழப்பு


தெற்கு நைஜீரியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 25 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரிய விமானப்படை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், விமானத்தில் 5 விமானப் பணியாளர்கள் மற்றும் 20 பயணிகள் என மொத்தம் 25 பேர் இருந்ததாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, விமானப் போக்குவரத்து அமைச்சர் ஃபெஸ்டஸ் கெயாமோ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 என தெரிவித்திருந்தார். பின்னர் இந்த எண்ணிக்கை 25 என திருத்தப்பட்டது.

இந்த விமானம் நைஜீரியாவின் ஈடோ மாநிலத்தில் இருந்து லாகோஸ் நகருக்குச் சென்றுகொண்டிருந்தது. ஒண்டோ மாநிலத்தின் இக்போகோடா பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது.

உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது. பின்னர் கடற்படைத் தளத்திற்கு அருகே விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

விமானம் ரேடாரில் இருந்து மறைந்ததும், நைஜீரிய விமானப்படை உடனடியாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கியது. மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் ஆற்றுப் பகுதிகளிலும் தேடுதல் நடத்தினர்.

விமான விபத்து நடந்த இடத்தில் சில உடல் பாகங்கள், ஆடைகள் மற்றும் காலணிகள் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

No comments