22வது அரசியல் திருத்தம் சட்டப்படி நிறைவேறுமானால் அநுரவின் இரண்டாம் ஆண்டு ஆட்சிப் பூர்த்திக்கு இது பரிசு! பனங்காட்டான்
22வது அரசியல் திருத்தம் ஜே.வி.பி.யின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஓர் அமிலச் சோதனையாக அமைந்துள்ளது. வென்றால் இது சட்டமாகும். சறுக்கினால், எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது போன்று ஒரு கட்சி ஆட்சி நீட்சி பெறும் சூழ்நிலை உருவாகலாம்.
அநுர குமர திஸ்ஸநாயக்க இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக பதவியேற்று இந்த மாத இறுதியில் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது. முன்னைய ஜனாதிபதிகள் போன்று சேவைக்கால பூர்த்தியை கொண்டாடும் வழக்கத்தை இவரதமது முதலாவது ஆண்டு பூர்த்தியில் காட்டவில்லை.
1971லும், 1987-1989 காலப்பகுதியிலும் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்த ஜே.வி.பி. இயக்கம், அதிலிருந்து விடுபட்டு ஜனநாயக தேர்தல் வழியாக தமது மறுவடிவமான மக்கள் தேசிய கட்சி மூலம் ஆட்சிக் கதிரையில் அமர்ந்துள்ளது.
ஊழல் ஒழிப்பு, போதைவஸ்து முறியடிப்பு ஆகிய கொள்கைகள் ஊடாக பொருளாதார விருத்தி காணும் கொள்கைகளை முன்வைத்துள்ள இந்த ஆட்சி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓரளவுக்கு இவ்விடயங்களில் அறுவடையைக் காண்பித்து மக்கள் ஆதரவை தக்க வைத்துள்ளது. எனினும், வாழ்க்கைச் சுமையிலிருந்து மக்கள் முழுமையாக இன்னும் விடுதலை பெறவில்லை. பொருட்களின் விலை ஏறிக்கொண்டே போகிறது. நிதிப்பற்றாக்குறையும் வேலையின்மையும் மாறவில்லை. சர்வதேச உதவியையே தேசிய மக்கள் சக்தி அரசு நாடி நிற்கிறது.
ஊழல் ஒழிப்பில் சுத்தமான கை தெரிகிறது. முன்னைய ஆட்சிக் காலங்களில் பெருமளவு பணத்தை சூறையாடியது என்ற சந்தேகத்தில் பலர் கைதாகி வருகின்றனர். மகிந்தவின் மூத்த புதல்வாரன - இவரே அடுத்த ஜனாதிபதி என அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நாமல் ராஜபக்சவும் இப்போது கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பெரும் தலைகளே உருட்டப்படும் நிலைமை அங்குமிங்குமாக காணப்படுகிறது. இதனை சாதாரண மக்கள் எதிர்ப்பு காட்டாமல் இருப்பதன் ஊடாக அவர்களின் ஆதரவு புலப்படுகிறது.
எனினும், அநுர அரசு இப்போது முகம் கொடுத்திருக்கும் முக்கியமான ஒன்றாக 22வது அரசியல் திருத்தச் சட்டம் மேலோங்கியுள்ளது. பிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரம்(?) வழங்கிய பின்னர் முதலாவது அரசியல் அமைப்பு உருவாக்கம் 1972ல் நிகழ்ந்தது. இலங்கை அரசியலில் முதல்முறையாக மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் இடதுசாரிகளுடனான கூட்டரசு புதிய அரசியலமைப்பை சாத்தியப்படுத்தியது.
இலங்கை என்ற பெயரை சிறீலங்கா என மாற்றியதோடு இந்தக் குட்டித்தீவை சோசலிச ஜனநாயக குடியரசாகவும் மாற்றியவர் சிறிமாவோ பண்டாரநாயக்க. 1977 பொதுத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன தம்மி~;டப்படி தம்மை தர்மி~;டர் எனக் கூறிக்கொண்டு 1978 செப்டம்பர் 7ம் திகதி புதிய அரசியலமைப்பை உருவாக்கி பிரதமர் பதவியில் இருந்த தம்மை ஜனாதிபதியாக்கிக் கொண்டார். இந்த வாரத்துடன் இதற்கு அகவை 48 ஆகின்றது. 1978ல் தாம் கொண்டு வந்த புதிய அரசியலமைப்பில் தமது பதவிக்காலத்திலேயே 16 திருத்தங்களை இவர் கொண்டு வந்தார். இதனை ஒரு கின்னஸ் சாதனை என்றும் கூறலாம்.
எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை ஏழாண்டுகளுக்கு ரத்துச் செய்து, தாம் விரும்புவதையெல்லாம் செய்து முடித்தார். ஆணைப் பெண்ணாக்குவதைத் தவிர மற்றைய அனைத்தையும் செய்யும் நிறைவேற்று அதிகாரம் தமக்கு இருப்பதாக பகிரங்கமாகக் கூறிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன அதனை செயலிலும் காட்டினார். இவரது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் ஆறாம், பதின்மூன்றாம் திருத்தங்கள் இன்றும் தமது பிறப்புரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இலங்கை தமிழ்த் தேசிய இனம் சம்பந்தப்பட்டது.
1983 யூலை தமிழின அழிப்பின் காயங்கள் காய்வதற்கு முன்னரான அடுத்த பதினைந்து நாட்களுக்குள் கடுகதி வேகத்தில் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி ஆறாம் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 1977 தேர்தலில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து பெற்றிருந்த அமோக வெற்றியையும் அக்கட்சியின் தலைவரான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானதையும் ஏற்றுக்கொள்ள முடியாதிருந்த இவர் ஆறாம் திருத்தம் ஊடாக தமிழ் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திலிருந்து நீக்குவதற்காக ஆறாம் திருத்தத்தை திட்டமிட்டு கொண்டு வந்திருந்தார். இத்திருத்தத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாததால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் புதல்வரான அநுர பண்டாரநாயக்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது.
ஜே.ஆரின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மற்றொரு முக்கியமான அரசியல் செயற்பாடு 13ம் திருத்தம். இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியோடு 1987ல் இவர் செய்துகொண்ட ஒப்பந்தம் மாகாணசபை உருவாக்கத்துக்கான 13வது அரசியல் திருத்தம். 1987 செப்டம்பர் 14ம் திகதி இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்றுவரை காணி அதிகாரமோ, காவற்துறை அதிகாரமோ மாகாண சபைகளுக்க வழங்கப்படவில்லை. இப்போது பல வருடங்களாக மாகாண சபைகளே காணாமற்போய்விட்டது. ஆனால் 13ம் திருத்தம் மட்டும் எழுத்தில் உள்ளது.
சிங்கள தேச ஆட்சியாளர்களாக தங்களது குடும்பத்தை மாற்ற முனைந்த ராஜபக்சக்களில் முக்கியமானவரான மகிந்த ராஜபக்ச இரண்டு தடவைகளுக்கும் மேலாக ஜனாதிபதி பதவியை வகிக்க விரும்பியதால் சர்வாதிகார போக்கில் 18ம் அரசியல் திருத்தத்தை நிறைவேற்றினார். ஆட்சியில் தமக்கிருந்த பெரும்பான்மையை இதற்காகப் பயன்படுத்தினார். இரண்டு தடவைகள் மட்டுமே என மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை 18ம் திருத்தம் காலவரையற்றதாக மாற்றினதாயினும், மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் இவர் தோல்வியடைந்தார்.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன 18ம் திருத்தத்தை நீக்கி, ஏற்கனவே இருந்த ஜனாதிபதி ஒருவர் இரு தடவை மட்டுமே என்ற சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். இதுவே 19ம் திருத்தம்.
அடுத்து நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு வந்த மகிந்தவின் சகோதரரான கோதபாய ராஜபக்ச தமக்கிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி 2020 அக்டோபர் 20ம் திகதி 19ம் திருத்தத்தை ரத்துச் செய்தார். ஆட்சியின் அத்திவாரமாக அமைந்திருக்க வேண்டிய அரசியலமைப்பை அடுத்தடுத்து வந்த மூன்று ஜனாதிபதிகள் மாற்றியும் நீக்கியும் கோமாளித்தனமாக நடத்திய நாடகங்களை 2010ம் ஆண்டிலிருந்து 2020 வரை பார்க்கக் கூடியதாகவிருந்தது.
கடந்த இரண்டாண்டுகளாக ஆட்சி புரியும் அநுர குமர அரசு முதன்முறையாக தங்கள் பதவிக்காலத்தில் ஓர் அரசியல் திருத்தத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. 22ம் அரசியல் திருத்தம் என்ற இச்சட்டமூலம் நாட்டில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசாங்கத்தின் நீதித்துறை அமைச்சர் என்ற வகையில் ஹர்ச நாணயக்கார இச்சட்டமூலத்தை கடந்த மாதம் 18ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். சமகாலத்தில் இச்சட்டமூலத்துக்கு எதிரான அறுபதுக்கும் அதிகமான மனுக்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
பிரதம நீதியரசர் தலைமையில் ஐந்து உச்சநீதிமன்ற நீதியரசர்கள் இதனை விசாரணை செய்து முடித்துள்ளனர். இவர்களின் தீர்ப்பு அரசியல் சட்டப்படி நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்படும். அதனை அவர் சபையில் பகிரங்கப்படுத்துவார். பதவியிலுள்ள நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பதே இச்சட்டத்தின் மூலமாகும்.
அநுர குமர அரசின் பதவிக்காலத்தை நீடிக்கவும், தேர்தல்களை காணாமலாக்கவும் 22ம் சட்டத்திருத்தத்தை ஆட்சித்தரப்பு பயன்படுத்தப் போவதாக கூறிவரும் எதிர்க்கட்சியினர், இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை இப்போதே முன்வைத்துள்ளனர். இதற்காக மக்களை வீதிகளில் இறக்கி போராட்டம் நடத்தவும் இவர்கள் முயல்கின்றனர்.
நீதிமன்றம் தீர்ப்பளித்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமென ஆட்சித்தரப்பு கூறிவருகிறது. எனினும், அவ்வாறான தீர்ப்பு வழங்கப்பட மாட்டாது என்ற நம்பிக்கை அரச தரப்புக்கு இருப்பதை காணமுடிகிறது. சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதில் ஆட்சித்தரப்பு தோல்வியடையுமானால் தேசிய மக்கள் சக்தி பெரும் நெருக்கடியை சந்திப்பது தவிர்க்க முடியாது போகும்.
22ம் அரசியல் திருத்த சட்டத்தை இலங்கை சமசமாஜ கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார (87 வயது) பகிரங்கமாக ஆதரித்து வருகிறார். உயர் நீதிமன்ற நீதியரசராகவிருந்த வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் இச்சட்டத் திருத்தத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
வாசுதேவ நாணயக்கார நீதியமைச்சர் ஹர்ச நாணயக்காரவின் பெரிய தந்தை. சி.வி.விக்னேஸ்வரனின் புதல்வர் ஒருவர் வாசுதேவ நாணயக்காரவின் புதல்வியை திருமணம் செய்தவர். இவர்கள் இருவரும் நீதியமைச்சர் ஹர்ச நாணயக்காரவின் உறவினராக இருப்பதால் 22ம் திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக கொழும்பின் ஆங்கிலப் பத்திரிகையொன்று கடந்த வாரம் சுட்டிக்காட்டியுள்ளது. 22ம் திருத்தச் சட்டம் 2025ல் நடைமுறைக்கு வந்திருப்பின் ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பதவி நீடிப்பு பெற்றிருப்பார் என்றும் நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதுவானாலும், 22வது அரசியல் திருத்தம் ஜே.வி.பி.யின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஓர் அமிலச் சோதனையாக அமைந்துள்ளது. வென்றால் இது சட்டமாகும். சறுக்கினால், எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது போன்று ஒரு கட்சி ஆட்சி நீட்சி பெறும் சூழ்நிலை உருவாகலாம்.

Post a Comment