தென்னாப்பிரிக்காவில் வீட்டு விருந்தில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி
தென்னாப்பிரிக்காவின் குவா-சூலு நடால் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
டர்பன் நகருக்கு தெற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குவாமகுதா நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரவு 11 மணிக்கு சற்று முன்னதாக, ஒரு வீட்டில் பலர் ஒன்றுகூடியிருந்தபோது ஆயுதம் ஏந்திய நபர்கள் அங்கு நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குவா-சூலு நடால் மாகாண முதல்வர் தாம்சான்கா ந்டுலி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த நால்வர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் சிலர் ஏற்கனவே காவல்துறையினரின் கவனத்தில் இருந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும், அவர்கள் எந்தக் காரணத்திற்காக குறிவைக்கப்பட்டனர் என்பது இதுவரை தெளிவாகவில்லை.
தாக்குதல் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்வதற்காக காவல்துறை 72 மணி நேர தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Post a Comment