சுரேஸ் சாலே சொகுசாக இருக்கிறார்?
முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே நீண்டகாலமாக வைத்தியசாலையில் சொகுசாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளது.
அது திட்டமிட்ட “மருத்துவ சதி” இடம்பெற்றிருக்கலாம் என அரசுத் தரப்பு நீதிமன்றில் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் தாமதப்படுத்தும் நோக்கிலேயே சுரேஸ் சாலே தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்தியசாலையில் வைத்திருக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 7ஆம் திகதி முதல் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஸ் சாலே தற்போது 100 நாட்களை வைத்தியசாலையில் பூர்த்தி செய்துள்ளார்.
சிறையில் இருந்தபோது கடுமையான மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டதாகக் கூறி சாலே சார்பில் மனநல மருத்துவ அறிக்கை ஒன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து சாலே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததாகவும், பின்னர் ஜூன் 7ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், சாலேவுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினை இல்லாத நிலையிலும் அவர் தேவையின்றி வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக் சந்தேகிப்பதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது.
இதனிடையே சாலேவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகள் இதுவரை நீதிமன்ற உத்தரவுகளின்படி சமர்ப்பிக்கப்படாமை குறித்து நீதிமன்றத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சாலேவின் உடல்நிலையை மதிப்பிடுவதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவின் அறிக்கையும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்தே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இலங்கை தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு செப்டெம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலை யாகுமாறு அறிவித்துள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தும் மருத்துவ அறிக்கைகள் ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதற்கும், ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவின் அறிக்கை ஏன் வழங்கப்படவில்லை என்பதற்கும் விளக்கம் அளிக்குமாறு பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment