நாமலின் திருட்டு மின்னஞ்சல் அகப்பட்டது!
இலங்கை விமான சேவைக்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பான விசாரணையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கு இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் மின்னஞ்சல் தொடர்பாடல்கள் தடயவியல் விசாரணைகளில் மீட்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையின்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தகவலை முன்வைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விசாரணையின் போது மீட்கப்பட்ட மின்னஞ்சல்கள், குறித்த விமான கொள்வனவு நடவடிக்கையுடன் நாமல் ராஜபக்ச தொடர்புடைய விதம் குறித்து தகவல்களை வெளிப்படுத்துவதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், ஏர்பஸ் நிறுவன அதிகாரிகள் இலங்கைக்கு வந்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஏர்பஸ் நிறுவனத்தின் 2013 மார்ச் 23ஆம் திகதியிட்ட மின்னஞ்சலில், “ஜனாதிபதியின் மகன்” என குறிப்பிடப்பட்ட ஒருவர், முன்மொழியப்பட்ட விமான விற்பனை தொடர்பான ஏர்பஸ் நிறுவனத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி ஊடாக அமைச்சரவைக்கு முன்வைப்பதாக உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழான விசாரணையில், ஏர்பஸ் விமான கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு தொகை சிங்கப்பூரில் உள்ள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனிடையே நாமல் ராஜபக்சவை செப்டெம்பர் 23ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அவரது பிணை விண்ணப்பம் தொடர்பான தீர்ப்பும் செப்டெம்பர் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Post a Comment