கோட்டாபயவிடம் ஊடகவியலாளர் கீத் நொயார் தொடர்பில் கேள்விகள்


எத்தனை கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல்கள் நடந்தாலும், நீதியைப் பெறுவதற்காக மக்கள் தொடர்ந்து போராடுவார்கள், நீதிமன்றத்தின் முன் வந்து பதிலளிக்க வேண்டிய நிலைமை நிச்சயம் வரும் என சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லலித் குகன் வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் மன்றில் முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் 

லலித் குமார் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய அரசியல் செயல்பாட்டாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் கோட்டாபய ராஜபக்ஷவை சாட்சியமளிக்குமாறு கடந்த  2019ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. 

இருப்பினும்,அவர் ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமையைப் பயன்படுத்தியும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பெற்ற தடை உத்தரவின் மூலமும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதன் காரணமாக, 7 ஆண்டுகளுக்குப் பிறகு சாட்சியமளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் முன்னிலையான நாங்கள் , சாட்சியான கோட்டாபயவிடம்  கேள்விகளை எழுப்பினோம். 

குறிப்பாக அவர், பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில், நாட்டில் நடந்த பல கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட  சம்பவங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பினோம்.

அதற்கு அவர் பல சந்தர்ப்பங்களில் 'நினைவில் இல்லை' என்ற பதில் அளித்தார்.,ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம் குறித்தும்  கேள்விகள் கேட்கப்பட்டன.

அந்தச் சம்பவங்கள் தொடர்பான அவருடைய நினைவைப் புதுப்பித்துக்கொள்வதற்கு சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய தேவை உள்ளது. 

எனவே நீதிமன்றம் அந்த ஆவணங்களை அவர் பார்வையிட்டுத் தனது நினைவைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பளித்தது, மீண்டும் அவரிடம் சாட்சியம் பதிவு செய்ய வழக்கினை எதிர்வரும், நவம்பர் 27ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் , காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், தருஸ்மன் அறிக்கை போன்ற பல அறிக்கைகள் உள்ளன.

அக்காலகட்டத்தில் நாட்டின் வடக்கு, தெற்கு என அனைத்து இடங்களிலும் சட்டத்திற்குப் புறம்பாக நடந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கேள்விகளை எழுப்புவோம்.

எனவே, எத்தனை கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல்கள் நடந்தாலும், நீதியைப் பெறுவதற்காக மக்கள் தொடர்ந்து போராடுவார்கள், நீதிமன்றத்தின் முன் வந்து பதிலளிக்க வேண்டிய நிலைமை நிச்சயம் வரும் என்பதை இந்த வழக்கின் மூலம் நினைவூட்ட விரும்புகிறோம் என தெரிவித்தார்

No comments