கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகள் துரித கெதியில் அள்ளப்பட வேண்டும்
கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகள் துரித கெதியில் மீள அள்ளப்பட வேண்டும் என கோரி வலி. வடக்கு பிரதேச சபையின் 10 உறுப்பினர்கள் சபையை புறக்கணித்துள்ளனர்.
கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபை மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவை கட்டுப்பாடின்றி கழிவுகளை கொட்டி வந்தமையால் , அதனை சூழவுள்ள நல்லிணக்க புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
அதனை அடுத்து , கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ள வேண்டும் என கோரி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த நிலையில் , கழிவுகள் கொட்டப்பட்ட இடத்திற்கு வடமாகாண ஆளுநர் . வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் , வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று , இரண்டு பிரதேச சபைகளாலும் கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள வேண்டும் என இரண்டு சபைகளின் செயலாளர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு பணித்திருந்தனர்.
இந்நிலையில், வலி, வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது. கீரிமலையில் கழிவுகள் அகற்றப்படும் செயற்பாடு மந்த கெதியில் நடப்பதாகவும் , அதனை துரித கெதியில் முன்னெடுக்க வேண்டும் என கோரி சபை அமர்வை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் 5 உறுப்பினர்கள், ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் ஆக 10 உறுப்பினர்கள் சபை அமர்வைப் புறக்கணித்தனர்
அதேவேளை தமிழரசு கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் , தேசிய மக்கள் சக்தி , ஈழமக்கள் ஜனநாயக கட்சி , ஆகிய உறுப்பினர்களின் பங்கேற்புடன் சபை அமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment