ஈரானுக்கு எதிராக வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதித் தாக்குதலைத் தொடுத்துள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு


ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியான புதிய தடைகளை அறிவித்த அவர், ஈரானுடனான தற்போதுள்ள அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டிக்க அமெரிக்கா செயல்படும் என்று கூறியுள்ளார்.

ஈரானுடன் நிதி அல்லது பொருளாதார உறவுகளைப் பேணும் எந்தவொரு நாடும் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

"ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்" என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பெசன்ட் கூறினார்.

டிஜிட்டல் சொத்துக்கள், தொழில்நுட்பம், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் கடல்வழிப் போக்குவரத்து ஆகிய ஐந்து துறைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 60 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தடைகளைத் தவிர்த்து எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட ஈரான் பயன்படுத்தும் வலையமைப்புகள், இடைத்தரகர்கள் மற்றும் நிதி வழிகளைத் தாம் அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள், ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தின் வருவாய் வழிகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று அவர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments