கல்முனை பகுதியில் தொடர் சைக்கிள் திருட்டு: இரு சகோதரர்கள் உட்பட நால்வர் கைது


கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) திருட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, போதைப்பொருளுக்கு அடிமையான இரு சகோதரர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி அவர்களின் தலைமையில், குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம். முஸ்தபா அவர்களின் வழிகாட்டலில் விசேட பொலிஸ் குழுவினர் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

குற்றத்தடுப்புப் பிரிவிற்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது, கல்முனைக்குடி செய்லான் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரு சகோதரர்கள் 3 திருடப்பட்ட சைக்கிள்கள் மற்றும் ஒரு தொகுதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், திருடப்பட்ட இரண்டு சைக்கிள்கள் சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் உள்ள பழைய இரும்பு வியாபாரி ஒருவரிடம் தலா 2,400 ரூபாவிற்கு விற்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதன்பேரில், கல்முனைப் பகுதியில் வைத்து மற்றுமொரு சைக்கிளை 1,700 ரூபாவிற்கு விலைக்கு வாங்கிய நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments