பலவீனமான தமிழரசுக் கட்சியும் இயக்கமற்ற சஜித்தின் தலைமையும் தேசிய மக்கள் சக்திக்கான ''போனஸ்'' பனங்காட்டான்
தமிழரசுக் கட்சியினதும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியினதும் அரசியல் பலவீனம் ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்திக்கான பலமாக மாறிவருகிறது. இந்தியா மற்றும் சீனா ஆகியவைகளின் பக்கபலம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி நீட்சிக்கு ஷபோனஸ்| ஆகுமானால் எவரும் ஆச்சரியப்பட நேராது.
தமிழர் தாயக அரசியல், சிங்கள தேச அரசியல் என்று நோக்கின் தமிழரசுக் கட்சியும், சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுமே கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின்; கூட்டு கடந்த சில நாட்களாக பல சந்திப்புகளை மேற்கொண்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி, இந்திய வெளியுறவுச் செயலாளர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருடனான சந்திப்பு அடுத்தடுத்து இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சித் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிலுள்ள பிரதிநிதிகளை அழைத்துச் சந்தித்தார்.
ஜனாதிபதி அநுர குமரவை இன்னும் எத்தனை தடவைகள் சந்தித்தாலும் தமிழர் தரப்பினரின் கோரிக்கைகளுக்கு ஒரே பதிலையே அவர் வழங்குவார். உரிய காலத்தில் பொதுத்தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பவை இடம்பெறுமா என்கிற சந்தேகம் சிங்கள கட்சிகளுக்கே ஏற்பட்டுள்ள நிலையில், மாகாண சபை தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு என்பவை அநுர அரசின் நிகழ்ச்சி நிரலில் உறுதியற்றவையாகவே காணப்படுகின்றன.
1977ல் முதன்முதலாக பிரதமர் என்ற பதவியுடன் ஆட்சிக் கதிரையில் ஏறிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன புதிய அரசியலமைப்பை உருவாக்கி தம்மைத் தாமே அதியுத்தம ஜனாதிபதியாக்கினார். சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்ற ஆயுட்காலத்தை நீடித்தார். இவைகளை நன்கறிந்த இன்றைய ஆட்சித்தரப்புக்கு அந்த நடைமுறையை பின்பற்றுவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஜே.ஆரிடமிருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை அநுரவின் தேசிய சக்திக்கும் உண்டு. இது தமிழரசுக் கட்சிக்கும் அவர்களோடு இணைந்திருக்கின்ற முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளுக்கும் தெரியும்.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த சுமந்திரனைப் பொறுத்தளவில் நாடாளுமன்றத் தேர்தலில் பங்குபற்றுவதில் பெரும் அக்கறை இல்லை. அதனால்தான் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்ற குரலில் முன்னணியில் நிற்கிறார். அவருடைய இலக்கு வடக்கு மாகாண சபை தலைவர் பதவி. அதற்காகவே இந்திய உதவியை நாடிச் செல்கிறார்.
அநுர குமர ஜனாதிபதியாக இருப்பதாலும், ஆட்சித் தலைவராக இருப்பதாலும் அவரைத் தொடர்ந்து தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதில் தவறில்லை. ஆனால், இந்த அரசாங்கத்தை பின்னாலிருந்து ஆட்டுபவர் யார் என்பது இன்னமும் தெரியாமல் இருப்பதுதான் தவறு. இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போட்டியிட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவும், சீனாவும் அநுர குமரவை சந்திப்பதைவிட ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை சந்திப்பதிலேயே கூடிய அக்கறை காட்டி வருகின்றன. இரு நாட்டு அரசாங்கங்களும் ரில்வின் சில்வாவை தங்கள் நாட்டுக்கு அழைத்து ஆலோசனை வழங்குகின்றன. ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று ரில்வின் சில்வாவுடன் உரையாடுகின்றனர். அநுர குமரவின் ஆட்சி ரில்வின் சில்வாவின் கைகளில்தான் இருக்கிறது என்பதை சீனாவும் இந்தியாவும் தெரிந்து கொண்ட அளவுக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டில் இருப்பவர்களுக்கு இன்னமும் தெரியவில்லையா?
இவரைச் சந்தித்தால் வெட்டொன்று துண்டு இரண்டாக இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு நறுக்கென பதிலளிப்பார். தேர்தலின்போது ஒரு கட்சி கூறிய வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற ஐந்து ஆண்டுகள் போதாது என்றும், குறைந்தது பதினைந்து ஆண்டுகளாவது ஆட்சியில் இருந்தால்தான் சொன்னவைகளை நிறைவேற்ற முடியுமென்றும் தமது சீன விஜயத்தின்போது அந்நாட்டுத் தலைவர்கள் தம்மிடம் கூறியதாக ரில்வின் சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்ததன் உள்நோக்கத்தை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஊழல் ஒழிப்பை தமது தேர்தல்கால வாக்குறுதியாக பிரகடனம் செய்த தேசிய மக்கள் சக்தி அவ்விடயத்தில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது. இந்தச் செயற்பாடு முன்னைய ஆட்சியாளர்களை மட்டுமன்றி சகல அரசியல் கட்சிகளையும் நிலைகுலைய வைத்துள்ளது. முன்னைய பதவி, தகுதி, தராதரம் என்பவற்றுக்கு அப்பால் கைதுகளும், விசாரணைகளும், தடுப்புக் காவல்களும் தொடருகிறது. போதைவஸ்து மன்னர்கள் உலகில் எந்தப் பகுதியில் பதுங்கியிருந்தாலும் கைது செய்யப்படுகின்றனர். இவர்களின் சட்டவிரோத சொத்துகள் அரசுடமையாக்கப்படுகிறது. வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன.
இவ்விடத்தில் ஒரு விடயத்தை முக்கியமாக குறிப்பிட வேண்டும். ஊழல் ஒழிப்பு, போதைவஸ்து தடுப்பு விடயங்களில் ஆட்சித் தரப்பு எடுக்கும் எந்த நடவடிக்கைகளையும் மக்கள் எதிர்க்கவில்லை. அமைதியாக ஆதரவு வழங்குகின்றனர். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறோ, புதிய அரசியலமைப்பை உருவாக்குமாறோ மக்கள் போராட்டம் நடத்தவில்லை. வீதிகளில் இறங்கவில்லை. தோற்றுப்போன, ஊழல் புரிந்த அரசியல்வாதிகளும் அவர்களின் எடுபிடிகளுமே தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
அதேசமயம், தனித்துப் போராடி ஆட்சித்தரப்பை ஆட்டங்காணச் செய்ய முடியாது என்ற சிந்தனையில், அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சி பல தடவை முன்னெடுக்கப்பட்டது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சுவீகார புத்திரரான ரணில் விக்கிரமசிங்க இம்முயற்சியில் ஒரு முழம் ஏறி பல அடிகள் சறுக்கியிருந்தார். பொதுஜன பெரமுனவுக்கு பிராணவாயு ஏற்றும் அனைத்து முயற்சிகளிலும் நாமல் ராஜபக்சவினால் வெற்றி காணமுடியவில்லை. இப்போது சஜித் பிரேமதாச இக்களத்தை தமதாக்க முயற்சிக்கிறார்.
இவர் முன்னால் விடைகாண முடியாத பல கேள்விகள் எழுந்து நிற்கின்றன. கடந்த கால தேர்தல்களில் தம்மை ஆதரித்த தமிழ் - முஸ்லிம் - மலையக கட்சிகளின் ஆதரவு தம்மிலிருந்து நீங்கி வருவதாக அவர் எண்ணுகிறார். புதிதாக உருவான தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் கூட்டை இழக்க இவர் விரும்பவில்லை. இதனால் அதன் பிரதிநிதிகளை அண்மையில் அழைத்து உரையாடியதோடு அதனை ஊடகங்களில் பெரிதளவில் இடம்பெறவும் செய்தார். முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் பங்குபற்றுவதில் காட்டிய ஆர்வத்தை தமிழரசுக் கட்சி பிரதிநிதிகள் காட்டவில்லை. நிச்சயமாக இது அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரனின் விருப்புக்கு இணங்க சஜித்தை தமிழரசுக் கட்சி ஆதரித்தது. தமிழர் வாக்குகளை அள்ளி எடுப்பதற்காக தாம் ஜனாதிபதியானால் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று நல்லூரில் நடைபெற்ற நிகழ்வில் இவர் தெரிவித்திருந்தார். எனினும் தமிழர்களின் வாக்கு பெருமளவுக்கு இவருக்குக் கிடைக்கவில்லை. தமிழ் பொதுவேட்பாளரை தமிழரசுக் கட்சியில் முக்கியமானவர்களே ஆதரித்தனர். இவர்களுள் கட்சியின் தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவஞானம் சிறீதரன் முதலாவது ஆளாhக சஜித்தை பகிரங்கமாக எதிர்த்திருந்தார்.
22ம் திருத்தமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை சட்ட மசோதாவை வன்மையாக எதிர்ப்பவராக சஜித் தம்மை அடையாளம் காட்டி வருகிறார். இச்சட்டமூலத்துக்கு இலங்கை வழக்கறிஞர் சங்கம் உட்பட பெரும்பான்மையான பொது அமைப்புகள் ஆட்சேபம் தெரிவிப்பதால் அந்த வட்டகைக்குள் தம்மை உட்படுத்தி லாபம் தேடும் நோக்கம் சஜித்திடம் காணப்படுகிறது. நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளதும் (அநுரவின் தேசிய மக்கள் சக்தி உட்பட) 225 எம்.பிக்களுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இச்சட்டமூலத்தின் பாதகங்கள் தொடர்பான கருத்துகளை தெரிவிக்கும் ஒரு கூட்டத்தை சஜித் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதனை ஆட்சித்தரப்பு நிராகரித்து விட்டது. இதனால் இச்சந்திப்பிலிருந்து இலங்கை வழக்கறிஞர் சங்கம் பின்வாங்கிக் கொண்டது.
பொதுவாக இன்றைய அரசியல் நிலைமையைப் பார்க்கின், தமிழர் தேசிய பரப்பில் தமிழரசுக் கட்சி பெரும் பின்னடைவைக் கண்டுகொண்டிருக்கிறது. தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட கூட்டை உருவாக்கிய போதிலும் அது தொடர்ந்து இயங்கக்கூடியதான சைகைகள் காணப்படவில்லை. நாடு தழுவிய ரீதியில் - முக்கியமாக தென்னிலங்கையில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி ஊன்றுகோலுடனேயே காணப்படுகிறது.
இதுவே ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்திக்கான பலமாக மாற்றம் பெற்று வருகிறது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் போட்டி அடிப்படையில் ஆட்சிபீடத்துக்கு பக்கபலமாக இயங்கி வருகின்றன. இதனால், தேசிய மக்கள் சக்தி மேலும் சில ஆண்டுகளை தேர்தல் இல்லாமல் போனஸாக பெறுமானால் அதனையிட்டு எவரும் ஆச்சரியப்பட நேராது.

Post a Comment