செம்மணி:மூன்றாம் கட்டம் முடிவு!
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை இறுதிநாள் அகழ்வு பணிகள் நடைபெற்றன.
செம்மணியில் முதலாம் கட்ட அகழ்வு பணிக்காக 09 நாட்களும் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 54 நாட்களும் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56 நாட்களும் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டு, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் இதுவரை செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளின் போது, 583 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவை அனைத்தும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 3 ஆம் கட்ட அகழ்வுப்பணிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அது குறித்து பேராசிரியர் ராஜ் சோமதேவவால் விசேட அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகத்திக்கிடையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற பிற சான்றுப்பொருட்களை அடிப்படியாக வைத்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நேற்றைய அகழ்வுப் பணிகளின்போது ஒரே பகுதியில் கூட்டாகக் காணப்பட்ட மூன்று எலும்புத் தொகுதிகளும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், அகழ்வுப் பகுதியில் இருந்து தாயத்து, நாணயம் மற்றும் சிறிய இரும்புத் துண்டு உள்ளிட்ட பொருட்கள் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகளில் இதுவரை குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடையதாகக் கருதப்படும் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட பல மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாணயங்கள், உலோகத் துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் சான்றுப் பொருட்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Post a Comment