கொலையாளி பொலிஸ் பாயிஸை தேடி வேட்டை!
இலங்கை இராணுவ புலனாய்வின் பின்னணியில் துணை ஆயுதக்குழுக்களுடன் இணைந்து கடந்த காலங்களில் படுகொலைகளை முன்னெடுத்து தற்போது ஜரோப்பிய நாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகள் கைது வேட்டையினுள் அகப்பட தொடங்கியுள்ளனர்.
அவ்வகையில் கிழக்கின் நடந்தேறிய முக்கிய கொலைகளின் கொலையாளியான காத்தான்குடி "பொலிஸ் பாயிஸ்" மீது திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியைச் சேர்ந்த, தற்போது இலண்டனில் வசித்து வரும் முகமட் பாயிஸ் என்பவருக்கு எதிராக, "பொலிஸ் பாயிஸ்" எனும் செல்லப்பெயரில் அறியப்படும் நபருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் திறந்த பிடிவிறாந்து ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஜூன் 17ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கின்படி, 2008ஆம் ஆண்டு காத்தான்குடிஃகல்லடி பகுதியில் இடம்பெற்ற ஐந்து மனிதக் கொலைகளுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டப்பட்டே பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கொலைகளில் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் ஒருவர் காத்தான்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டமை, மற்றும் வர்த்தகர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகியன அடங்கியுள்ளது.
அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பளீல் உள்ளிட்டோரின் கொலைகளுடன் அவருக்குத் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வழக்கு, சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான வழக்குடன் இணைந்ததாகும். பிள்ளையான் உள்ளிட்ட சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment