மாலை மரியாதை முக்கியம்:வடக்கு ஆளுநர்!
வடமாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வுகளிற்கு அரச தரப்பினை சேர்ந்தவர்களிற்கு முன்னுரிமை வழங்க வடக்கு ஆளுநர் நிர்ப்பந்தித்துவருதாபக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.அரச அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பின் பிரதிநிதிகளை வீதி வேலைகள் உள்ளிட்ட நிகழ்வுகளிற்கு அழைக்கவேண்டுமென ஆளுநர் பணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனிடையே யாழ்ப்பாண மாநகர சபையின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகரசபை ஆணையாளரும் ஏனைய அரசாங்க அதிகாரிகளும் தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டி, யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாநகரசபையில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து அடையாளப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி , ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணி , ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளது மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மாநகரசபை ஊடாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதங்களை ஏற்படுத்துவதோடு, தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் தலையிட்டு முடக்க முற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
போராட்டத்தில் யாழ்.மாநகரசபையின் முதல்வரும் இணைந்து பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment