போராட்டகாரர்களிற்கு வழக்கு!
வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில், இலங்கை காவல்துறையினர்; மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறியே வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்ரன் சுதாகர், வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் கணேசப்பிள்ளை வேந்தன் மற்றும் எம். குணசேகரன் உள்ளிட்டோரின் பெயர்கள் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனைவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே வலிகாமம் வடக்கு மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இம்முறை போராட்டத்தின் வடிவம் மாற்றப்பட்டிருந்தது. பலாலி செபஸ்தியார் ஆலய முன்றலில் இருந்து கறுப்பு மேலங்கிகளை அணிந்து, கைகளில் கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் ஊர்வலமாக பலாலி சந்தி நோக்கிச் சென்றிருந்தனர்.
பின்னர், பலாலி சந்திக்கு அருகிலுள்ள இராணுவ முன்னரங்குப் பகுதியில் ஒன்று கூடிய அவர்கள், பல தசாப்தங்களாக தங்களது கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இதன்பின்னர் பலாலி சந்திப் பகுதியில் போராட்டத்தைத் தொடர்ந்த மக்கள், மதியம் வரை தமது கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.
வலிகாமம் வடக்கில் பலாலி, மயிலிட்டி, கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் உள்ளிட்ட பகுதிகளில் தமது குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகள் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்தக் காணிகளை மீட்பதற்காக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னதாக ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ தெரிவித்திருந்தது.
நில உரிமைக்கான போராட்டம் தொடரும் நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு 22ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Post a Comment