ரவீந்திரநாத் ஆவி பிள்ளையானை விட்டபாடாகவில்லை!


பேராசிரியர் ரவீந்திரநாத் கொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை மீண்டும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் “பிள்ளையான்” உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்டமா அதிபர் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கில் பிள்ளையானுடன் கதிர்காம்பி ஜெயகிசன் (ஜெயந்தன்), நிமல் தேவ்சுகன் (ஜெயகந்தன்), நடராசா நகுலேந்திரன் (சிம்பு.நகுலன்) ஆகியோரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பேராசிரியர் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் மாதத்தில் கொழும்பில் இருந்து திரும்பிய பின்னர் கடத்தப்பட்டு காணாமல் போனதாக நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை பல ஆண்டுகளாக முடிவின்றி நீடித்த நிலையில், 2025 ஏப்ரல் மாதம் பிள்ளையான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு மீண்டும் தீவிரமடைந்தது.

2026 ஜூன் மாதத்தில் கிழக்கு மாகாணத்தில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைகள் தொடர்பாகவும் பிள்ளையான் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதனால், கிழக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த கடத்தல்கள் மற்றும் கொலைகள் தொடர்பான வழக்குகள் தற்போது மீண்டும் நீதித்துறை விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.


No comments