வடக்கு நோக்கி வரும் முதலீட்டாளர்களை விரக்தியடைய வைக்காதீர்கள்


வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது எனவும் சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை தாமதமின்றி வழங்கி, அவற்றின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளையும் பிரதேச அபிவிருத்தியையும் உருவாக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் மற்றும்  வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தினர்.

பொதுநல மீன் வளர்ப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் சன்சக்தி டிரேடர்ஸ் (தனியார்) நிறுவனம் முன்னெடுக்கவுள்ள முதலீட்டுத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம்  செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.

அக் கலந்துரையிடலில் , திட்டம் தொடர்பில் முதலீட்டாளர் தரப்பு, சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் மற்றும் பிரதேச நிர்வாகம் ஆகிய தரப்புகளின் நிலைப்பாடுகள் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

இத்திட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் 28ஆம் திகதி ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பருத்தியடைப்பு பகுதியில் பொதுமக்களுடன் மீண்டும் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அன்றைய தினம் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் நேரடியாகச் சென்று, திட்டம் தொடர்பான தெளிவான மற்றும் விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை மக்களுக்கு வழங்குவதுடன், திட்டத்தை சட்டரீதியாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு ஆளுநரும் அமைச்சரும் இணைந்து பணிப்புரை வழங்கினர்.

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் பிராந்தியப் பொறியியலாளர்,  மற்றும்  சன்சக்தி டிரேடர்ஸ் (தனியார்) நிறுவனத்தின் முதலீட்டாளர்  ஆகியோர் கலந்துகொண்டனர்

No comments