2028 ஆம் ஆண்டு முதல் பிளேஸ்டேஷன் கேம் டிஸ்க்குகளைத் தயாரிப்பதை சோனி நிறுத்த உள்ளது
சனவரி 2028 முதல், பிளேஸ்டேஷன் விளையாட்டுகளை டிஜிட்டல் வடிவங்களில் மட்டுமே வெளியிடுவதாகவும், இனிமேல் எந்தவொரு இறுவட்டுகளையும் தயாரிக்கப் போவதில்லை என்றும் சோனி நிறுவனம் நேற்றுப் புதன்கிழமை அறிவித்தது.
சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் கன்டென்ட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குநரான சித் ஷுமான், இந்த நடவடிக்கையை நுகர்வோர் விருப்பங்களில் மாறிவரும் போக்குகளுக்கு ஒரு பதில் என்று குறிப்பிட்டார்.
இந்த மாற்றம் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகளைக் குறைக்கும், ஆனால் நுகர்வோருக்கான வாய்ப்புகளையும் கட்டுப்படுத்தும். குறிப்பாக, விளையாட்டுகளைப் பரிமாறிக்கொள்ள அல்லது பழைய பொருட்கள் சந்தையில் வாங்கவோ விற்கவோ விரும்புபவர்களுக்கு இது பாதகமாக அமையும்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI வெளியீட்டுத் திகதி மற்றும் இந்த விளையாட்டு டிஜிட்டல் முறையில் மட்டுமே வாங்கக் கிடைக்கும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விருப்பங்களும், பரந்த பொழுதுபோக்குத் துறையும் இறுவட்டுகளிலிருந்து டிஜிட்டல் முறைக்குத் தொடர்ந்து மாறி வருவதால், பிளேஸ்டேஷன் கன்சோல்களில் வெளியாகும் அனைத்து புதிய கேம்களுக்கான விளையாட்டுக்கான வட்டு உற்பத்தி, ஜனவரி 2028 முதல் நிறுத்தப்படும் என்று சோனியின் ஷுமான் ஒரு பிளேஸ்டேஷன் வலைப்பதிவு இடுகையில் எழுதியுள்ளார் .
இந்தத் திகதிக்குப் பின்னர், புதிய கேம்கள் ஆன்லைன் பிளேஸ்டேஷன் ஸ்டோரில் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் டிஜிட்டல் வடிவத்தில் மட்டுமே கிடைக்கும்.
இந்த திகதிக்கு முன்னர் வெளியிடப்பட்ட விளையாட்டுகளில் இந்த நடவடிக்கை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ஊடகங்களுக்கான பொது விருப்பம், பௌதீக வட்டுகளை விட கணிசமாக அதிகரித்து வருவதால், நுகர்வோர் போக்குகளுக்கு ஏற்ப சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் தன்னை மாற்றிக்கொள்வது இது ஒரு இயல்பான திசையாகும் என்று ஷுமான் எழுதினார். இந்த மாற்றம், இன்று எங்கள் சமூகத்தில் பெரும்பாலானோர் விளையாட்டுகளை அணுகவும் விளையாடவும் விரும்பும் விதத்துடன் நாங்கள் இன்னும் நெருக்கமாக ஒன்றிணைய உதவும்.
விளையாட்டாளர்கள் விளையாட்டுகளை அணுகும் முறைகளில் புதுமைகளைப் புகுத்துவதற்கும், சில்லறை விற்பனையாளர்கள் அல்லது பிளேஸ்டேஷன் ஸ்டோர் போன்ற இடங்களில் புதிய விளையாட்டுகளை வாங்குவதற்கான விருப்பங்களை வழங்குவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று சோனி கூறியுள்ளது.

Post a Comment