பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் இன்று வெள்ளிக்கிழமை (24) காணொளி ஊடாக உத்தரவிட்டு தொடர்ந்து இலண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸுக்கு பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டார்.
2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி.பி. கட்சி உறுப்பினர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சி.ஐ.டியினர் கைது செய்தனர்.
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளுடன் தொடர்புபட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜூன் 17 ஆம் திகதி சி.ஐ.டி யினர் வழக்கு தாக்கல் செய்து பின்னர், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (24) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக நீதிவான் எடுத்துக் கொண்டபோது சந்தேக நபரான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகிய இருவரையும் திறந்த நீதிமன்றில் ஆஜர்படுத்திய சிஐடியினர் பிள்ளையானை நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாத பாதுகாப்பு காரணங்களை முன்வைத்ததுடன் இந்த கொலைச் சம்பவங்களுடன் இராணுவ தகவல் பிரிவு மற்றும் சிவில்பாதுகாப்பு குழுக்கள் தொடர்பட்டுள்ளமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக நீதிமன்றில் சிஐடி யினர் சமர்பணம் செய்தனர்.
இதேவேளை பிள்ளையான் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி பிள்ளையானை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கடந்த வழக்கு விசாரணையின் போது முன்வைத்த கோரிக்கை தொடர்பாக மீண்டும் முன்வைத்தார்.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்து, வழக்கை ஆராய்ந்த நீதிவான், பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறையில் (சூம்) இணைய வழி காணொளி ஊடாக பார்வையிட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ் பாய்ஸுக்கு தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டு உத்தரவு பிறப்பித்தார்.

Post a Comment