அர்ச்சுனாவுக்கு பிடியாணை: பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்!


யாழ். மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவு தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தினர்.

யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது .

பொலிஸ் அதிகாரிகளின் கடமையைத் தடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் ஆஜராகத் தவறியதன் காரணமாக இந்தப் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, தனக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு தொடர்பில் சபையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த நிலையிலேயே சர்ச்சை ஏற்பட்டது.

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பிய அர்ச்சுனா, தான் பாராளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டிருக்கும் நிலையில் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. அதாவது நான் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்று பிடியாணை உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனை தொடர்ந்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாங்கள் குறுஞ்செய்திகளில் அறிந்தோம். இவ்வாறு பாராளுமன்றத்திற்கு வந்துள்ள ஒருவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பது சிறப்புரிமை பிரச்சினையாகும். இதனால் சபாநாயகர் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

இதன்போது தான் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்து நீதவானுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கின்றேன் என்று சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தெரிவித்தார்.

இவ்வேளையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்த நிலையில், எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதானது அவருக்கு உள்ள சிறப்புரிமையாகும்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலியுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், ஆளும் கட்சியினர் நீதிமன்ற உத்தரவை நியாயப்படுத்தி கருத்துக்களை முன்வைத்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் இது தொடர்பான சர்ச்சை நிலவியது.


No comments