காலி முகத்திடல் போராட்டத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் , காணி விடுவிப்பு போராட்டத்திற்கு கொட்டகை அமைக்க அனுமதிக்கின்றார்கள் இல்லை
அநுரகுமார திஸாநாயக்க ஆட்சி அமைத்து 2 வருடங்கள் கடந்த நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. காலி முகத்திடல் போராட்டத்தின் மூலமான அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் காணி விடுவிப்பு போராட்டத்திற்காக கொட்டகைகளை கூட அமைக்க அனுமதிக்கின்றார்கள் இல்லை என சம உரிமை இயக்கத்தின் இந்திரானந்தா டீ சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு 38 வருடங்கள் கடந்துள்ளன. யுத்தம் முடிவடைந்தும் , அவர்களின் காணிகளை மீள கையளிக்கவில்லை.
ஆட்சிக்கு வருவோர் எல்லாம் , காணிகளை விடுக்கின்றோம் என கூறி ஆட்சிக்கு வந்த பின்னர் காணி விடுப்பை கிடப்பில் போடுகின்றார்கள்.
காலி முகத்திடல் போராட்டத்தின் ஊடான அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் , மக்களின் பிரச்சனைகளை நன்கு உணர்ந்தவர்கள் அந்த வகையில் எங்கள் காணிகளை விடுவிப்பார் என வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியினருக்கு பெருமளவான வாக்குகளை அளித்தனர்.
அநுரகுமார திஸாநாயக்க ஆட்சி அமைத்து 2 வருடங்கள் கடந்த நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. காணி விடுவிப்பு போராட்டத்திற்காக கொட்டகைகளை கூட அமைக்க அனுமதிக்கின்றார்கள் இல்லை.
பாதுகாப்பு காரணம் என கூறி , ஒரு இராணுவ அதிகாரி தங்குவதற்காக சுமார் 150 குடும்பங்களில் வீடுகள் , காணிகளை அபகரித்து கொமோண்டோ பங்களா கட்டி வசதியாக அந்த இராணுவ அதிகாரி வாழ்கின்றார். அந்த காணி உரிமையாளர்களுக்கு இந்த அரசாங்கம் சொல்லும் பதில் என்ன ? இதொரு உணர்வற்ற அரசாங்கமாக ?
இராணுவ கட்டுப்பாட்டிற்குள் மக்கள் வாழ முடியவில்லை. அவர்களின் வணக்க ஸ்தலங்களுக்கு செல்ல முடியவில்லை. அங்கு செல்வது என்றால் இன்றும் அடையாள அட்டை இலக்கங்களை பதிந்த பின்னரே இராணுவத்தினர் அனுமதி வழங்குகின்றார்கள்.
அதுமட்டுமின்றி , மக்களின் காணிக்குள் விவசாயம் செய்யும் இராணுவத்தினருக்கு உடல் உழைப்பு இலவசமாக கிடைக்கிறது. பொருட்களை எடுத்து செல்ல இராணுவ வாகனத்தை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறாக மிக மிக குறைந்த உற்பத்தி செலவுடன் , உள்ளூர் சந்தைகளில் விவசாய பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்வதனால் , உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது விவசாயியின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் அநுர குமார திஸாநாயக்கவிற்கும், அனுராதபுரத்தில் பிறந்து விவசாய அமைச்சராக இருக்கும் லால் காந்தவிற்கும் இது புரியவில்லையா? பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள், எப்போதும் இப்படியே ஏமாற்றிக் கொண்டிருக்க முடியுமா? பிரச்சனைகளை மூடிமறைத்து காலத்தைக் கடத்தப் பார்க்கிறார்கள்வட பகுதி மக்கள் தங்களின் சொந்த நிலங்களைக் கேட்டுப் போராடும் போதெல்லாம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சிலர் திட்டமிட்ட முறையில் "இதோ மீண்டும் புலிகள் தலைதூக்குகின்றார்கள்" என்று பரப்புரை செய்கிறார்கள்.இது ஒரு ஏமாற்று வேலை, முற்றிலும் பொய்! எனவே, இந்த அப்பாவி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுடன் இத்தகைய பொய்களைத் தொடர்புபடுத்த வேண்டாம் என்று தென்னிலங்கை சிங்களச் சமூகத்திடம் மிகவும் அன்பாகவும் தோழமையுடனும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்

Post a Comment