வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு - ஒருவர் படுகாயம்
கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், குறித்த வீட்டின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் பிலியந்தலை நோக்கி தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களில் இருவர் பொகுந்தர, வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடொன்றை நோக்கி மோட்டார் சைக்கிளில் வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரை அவதானித்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளைத் திருப்பி தப்பிச் செல்ல முயன்ற போது, பொலிஸார் அவர்களை சுற்றிவளைத்துள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதச் செய்து விபத்தை ஏற்படுத்தியதுடன், பின்னால் அமர்ந்திருந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியுள்ளார்.
இதன்போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த சந்தேக நபர் காயமடைந்து கீழே விழுந்துள்ளார். எனினும், மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றைய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து வெற்றுத் தோட்டா உறை ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொரலஸ்கமுவ வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 24 வயதுடைய இளம் பெண் ஒருவரும், சந்தேக நபர்களை துரத்திச் சென்ற போது விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளும், துப்பாக்கிச் சூட்டில் இடுப்பில் குண்டு பாய்ந்து காயமடைந்த பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரும் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், சந்தேக நபர்கள் பிரபல திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கொஸ் மல்லி’ என்பவரின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment