ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் யாழ்.வருகை கண்துடைப்பாக அமையக் கூடாது


செம்மணி சமூகப் புதைகுழி இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் முக்கிய சாட்சியாக உள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் இலங்கை வருகை வெறும் கண்துடைப்பாகவோ அல்லது அரசியல் நாடகமாகவோ அமைந்துவிடக் கூடாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில்,

தூதுக்குழுவினர் நேரில் கண்ட சாட்சிகள், பெற்றுக்கொண்ட அறிக்கைகள் மற்றும் தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, இலங்கையில் யுத்தக் குற்றங்களுடன் இனப்படுகொலையும் இடம்பெற்றுள்ளதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதுவே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கௌரவமாக அமையும் 

கடந்த 78 ஆண்டுகளாக இலங்கையில் தொடர்ந்த தமிழின அழிப்பு நடவடிக்கைகள் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையாக உச்சமடைந்ததாகவும், ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் தற்போதைய ஆட்சியிலும் இன அழிப்பு தொடர்கிறது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற போதிலும், பேரவையால் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை ஆட்சியாளர்கள் புறக்கணித்து வருகின்றனர்

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் செம்மணிக்கு விஜயம் செய்திருந்த போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை 

தமிழர் தாயகத்தில் இதுவரை அகழப்பட்டுள்ள புதைகுழிகளும், தற்போது அகழப்பட்டு வரும் செம்மணி சமூகப் புதைகுழியும், 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய உயிரிழப்புகளும் யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு முக்கிய சாட்சிகளாக உள்ளது.

எனவே, மனித கௌரவத்தையும் தமிழ் மக்களின் நீதிக்கான எதிர்பார்ப்பையும் கருத்திற்கொண்டு, இலங்கையில் யுத்தக் குற்றங்களுடன் இனப்படுகொலையும் இடம்பெற்றதாக சர்வதேச சமூகத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டும் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments