தையிட்டி விகாரை பிரச்சனை - மக்களின் காணி மக்களுக்கு ; விகாரை காணி விகாரைக்கு


தையிட்டியில் மக்களுக்கு சொந்தமான காணி மக்களுக்கும் , விகாரைக்கு சொந்தமான காணி விகாரதிபதியிடமும் ஓரிரு வாரங்களில் ஒப்படைக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் செய்த அமைச்சர் , மருதனார்மடத்தில் வீதியொன்றின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தையிட்டி விகாரை, தொடர்பில் அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் அழைத்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக நீதி அமைச்சர், வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்தொழில் அமைச்சர், வடமாகாண ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், வலி வடக்கு பிரதேச செயலாளர், நிலவளத் திணைக்களத்தினர் ஆகியோருடன் எனது அமைச்சும் பலமுறை ஒன்று கூடி கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம்.

அத்துடன் காணி உரிமையாளர்களுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளோம் 

அந்தக் கலந்துரையாடல்களின் முதல் கட்டமாக, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முயற்சித்த வேளை,அங்கு ஏற்பட்ட சிறிய பிரச்சினை காரணமாக அதைச் செய்ய முடியாமல் போனது.

எமது நோக்கம் இந்த பிரச்சினைகளை தீர்த்து, காணி உரிமையாளர்களிடம் அவர்களுக்கு சொந்தமான காணிகளை வழங்க வேண்டும் என்பதாகும்.

மக்களுக்குச் சொந்தமான எதையும் பறிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. 

அதேவேளை 1972 ஆம் ஆண்டின் நில அளவையில் படமொன்றில்  இந்த விகாரை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே விகாரைக்குச் சொந்தமான காணி அளவை விகாரைக்கு வழங்கிவிட்டு, மக்களுக்குச் சொந்தமான காணியை மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

அதன் அடிப்படையில் மக்களுக்குச் சொந்தமான காணிகள் மக்களுக்குச் சென்றடைய வேண்டும்.விகாரைக்குச் சொந்தமான காணி விகாரைக்குச் சென்றடைய வேண்டும்.

அது தொடர்பில் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் முதற்கட்ட தீர்மானத்தை எடுக்க முடியும் என நினைக்கிறேன். அதன் பிறகு, முறையான நில அளவை செய்து, அவரவர் காணிகளைப் பிரித்து, ஒப்படைப்பதே எமது நோக்கமாகும் என தெரிவித்தார். 

No comments