ஈஸ்டர் தாக்குதல்:சுயநல அரசியலில்?

 



தங்களுடைய சுய நலத்திற்காக, அரசியல் நோக்கங்களுக்காகவும், இனவாதத்திற்காகவும் மக்களைக் கொல்வது என்பது மிகவும் ஒரு காட்டு மிராண்டித்தனமான ஒரு செயல் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (10) ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் ஈஸ்டர் தாக்குதல் என்பது திட்டமிட்ட முறையில் நடந்தது உலகறிந்த உண்மை. இலங்கையில் இருக்கும் எல்லோரும் அறிந்த உண்மை.

ஆகவே, அதைச் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் .அதனாலேயே இனங்களுக்கு இடையே ஏற்படுகின்ற அந்த இன மோதல்கள், இந்த நல்ல முறையான தீர்ப்புகளை அளித்து அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு நேரத்தில், நிற்கிறோம்.

இலங்கை நாடு என்பது ஒரு சமய, ஆன்மீக வழியிலே வளர்ந்து வருகின்ற ஒரு நாடாக இருப்பதனால், பௌத்த மதம் அழகான சமய, ஆன்மீக சிந்தனை களோடு மக்களை வழிநடத்துகின்ற ஒரு சமயம்.

அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அத்தோடு இஸ்லாமிய சமயம், அத்தோடு சைவ சமயம், அத்தோடு கத்தோலிக்க கிறிஸ்தவ சமயங்கள் எல்லா மக்களை ஒழுக்கத்தோடு வழிநடத்துகின்ற ஒன்றுதான்.

உண்மைக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து சமயங்களும் அதற்கு, இந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு உண்மையைத் தேடி உழைக்கின்ற சமயங்களாக இருக்கிறதே ஒழிய தடையாக இல்லை.

ஆனால், சமயங்களைப் பயன்படுத்தி அதற்கு தடையை ஏற்படுத்துகின்ற அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அத்தோடு அரசியலுக்காக உண்மைகளை மறைக்கும் செயலானது, இன்னும் வருங்காலத்தில் மிகப்பெரிய பிளவுகளையும், மிகப்பெரிய பிரச்சினைகளையும், விடிவுக்கு வராத, முடிவுக்கு வராத ஒரு இனப்பிரச்சனையாக வளர்ந்து செல்வதற்கும் மிகவும் உதவியாக இருக்கப்போகிறதெனவும் மார்க்ஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.


No comments