பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக ஐசிசி கரீம் கானை இடைநீக்கம் செய்தது!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்கறிஞர் கரீம் கான், உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக, நீதிமன்றத்தின் நிர்வாக அமைப்பு திங்கள்கிழமை இரவு அறிவித்தது.
அரசு வழக்கறிஞரின் பாலியல் முறைகேடுகள் குறித்த உதவியாளரின் வாக்குமூலங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட 18 மாத கால விசாரணைக்குப் பின்னர் கான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்வினையாக, கானின் வழக்கறிஞர்கள் அந்த முடிவை, சட்டவிரோதமானது, நடைமுறை ரீதியாக நியாயமற்றது மற்றும் ஆதாரங்களால் ஆதரிக்கப்படாதது என்று விவரித்தனர்.
கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றத்தின் சுதந்திரமான கண்காணிப்பு அமைப்பிடம் முதன்முதலில் தெரிவிக்கப்பட்டன.
கான், ஐசிசி-யின் பெண் ஊழியர் ஒருவரை நீண்ட காலமாகத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உள் கண்காணிப்பு சேவைகள் அலுவலகத்தின் (OIOS) அறிக்கை நகலின்படி, அவர் தனது அலுவலகத்திலும், தனிப்பட்ட இல்லத்திலும், மற்றும் ஒரு பணியில் இருந்தபோதும் (அந்த உதவியாளருடன்) அவரது சம்மதமின்றி பாலியல் தொடர்பு கொண்டார்.
பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு உண்மை அடிப்படை இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வாளர்களின் அறிக்கை கண்டறிந்ததாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் வட்டாரங்கள் முன்னதாகத் தெரிவித்தன. இருப்பினும், ஐ.நா.வின் கண்டுபிடிப்புகளை மறுஆய்வு செய்த மூன்று நீதிபதிகளின் இரண்டாவது அறிக்கை, குற்றச்சாட்டுகளின் உண்மையை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிலைநாட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கூறியது.
கான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மீண்டும் மீண்டும் மறுத்துள்ளார். விசாரணையின் முடிவு வரும் வரை, அவர் 2025 மே மாதம் தனது பதவியிலிருந்து விலகினார்.
இச்செய்தி வெளியாகும் வரை கான் மீது எந்தக் குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து என்ன நடக்கும்?
ஐசிசி-யின் மேற்பார்வை அமைப்பின் செயற்குழுவான, 21 உறுப்பினர்களைக் கொண்ட உறுப்பு நாடுகளின் பேரவை (ASP) செயற்குழு, இந்த வழக்கை ஐசிசி-யின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட பேரவைக்குப் பரிந்துரைக்க முடிவு செய்தது.
கானை இடைநீக்கம் செய்யும் முடிவு தகுதிவாய்ந்த பெரும்பான்மையால் எடுக்கப்பட்டது என்று அந்தப் பணியகம் கூறியது. அதன் மதிப்பீடு, OIOS மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை, ஆதாரங்கள், நீதித்துறை நிபுணர்களைக் கொண்ட ஒரு தற்காலிகக் குழுவின் ஆலோசனை மற்றும் எழுத்துப்பூர்வமான சமர்ப்பிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.
கானை அவரது பதவியிலிருந்து நீக்குவதற்கு, ஐசிசியின் 125 உறுப்பு நாடுகளில் பெரும்பான்மையானவை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
என்ன நடத்தது?
2021 முதல் தலைமை வழக்கறிஞராக இருந்து வரும் கான், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட பிரமுகர்களுக்குக் கைது வாரண்டுகளைப் பிறப்பித்தார் .
குறிப்பாக நெதன்யாகு மீதான பிடியாணை விவகாரத்தில், அமெரிக்கா நீதிமன்றத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்து, ஊழியர்கள் மற்றும் நீதிபதிகள் மீது தடைகளை விதித்தது .
ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகள் உட்பட 125 நாடுகள் நீதிமன்றத்தில் இணைந்துள்ள நிலையில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணையவில்லை.

Post a Comment