அரசியல் கட்சிகளால் சூறையாடப்பட்டுள்ள தொழிலாளர் தினம்! பனங்காட்டான்
தொழிலாளர் தினம் என்பது எவ்வாறு மே தினமாக மாற்றப்பட்டதோ, அவ்வாறே பௌத்தர்களின் வெசாக் தினம் மே முதலாம் திகதியை மாற்றும் அரசியல் மயப்பட்டுள்ளது. 1969ம் ஆண்டு வெசாக் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் எவ்வாறு தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது என்பதை 57 ஆண்டுகளின் பின்னர் இப்போது ஒரு தடவை நினைவுக்குட்படுத்த வேண்டியது, வரலாற்றுத் தேவையாகியுள்ளது.
இன்னொரு மே தினமும் வந்து போய்விட்டது. இதுதான் சர்வதேச தொழிலாளர் தினம் என்பது மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு மே மாதத்தின் முதல் நாள் மே தினம் என்றவாறாக மாற்றப்பட்டு விட்டது.
இலங்கையைப் பொறுத்தவரை தொழிலாளர் தினம் என்ற மே முதலாம் நாள் அரசியல் கட்சிகள் தங்களுக்கான ஆட்பலத்தைக் காட்டவும், கூட்டவும் ஆக்கிவிட்டன என்பதுவே வரலாறாகி வருகிறது.
1886ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி தொழிலாளர்கள் தங்களுக்கு எட்டு மணி நேர பணியைக் கோரி போராட்டம் சிக்காகோவில நடத்தி வெற்றி பெற்றனர். உலகளாவிய சோசலிச - மார்க்சிஸ சக்திகள் இந்த நாளை நிலைநாட்டும் முகமாக 1889ல் தொழிலாளர் தினமாக பிரகடனம் செய்து அனைவருக்கும் விடுமுறை நாளாக்கியது.
இந்த வரலாறு இன்று மே தினம் என்று கொண்டாடுபவர்களில் எவ்வளவு பேருக்கு தெரிந்திருக்கும்? இலங்கையின் முன்னைய சகல அரசாங்கங்களிலும் தொழில் அமைச்சரென தனியொருவர் இருப்பார். மே மாதம் முதலாம் திகதி ஊடகங்களில் இவரது தொழிலாளர் தின செய்தி வாழ்த்தாக வெளிவரும். இப்போது தனியாக தொழில் அமைச்சர் என்று எவரும் இல்லை. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்று பெயரிடப்பட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு தொழிலாளர் நலன், அவர்களின் தொழில் பாதுகாப்பு, சம்பள உயர்வுக்கான உத்தரவாதம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகிவிட்டது. தொழிலாளர் தினம் என்பது காணாமல் போய், அரசியல் கட்சிகளுக்கான ஆட்சேர்ப்பு நாளாக இது மாற்றப்பட்டுவிட்டது.
சில வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி. தனது மே தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடியது. இதன் தலைவர்கள் தங்கள் பட்டாளங்களுடன் செஞ்சட்டை அணிந்து கொடிகளை ஏந்தியவாறு வீதிவழியாக கோசத்துடன் சென்றனர். இந்த ஊர்வலத்தில் தமிழரசுக் கட்சி எம்.பியாகவிருந்த சுமந்திரனும் முன்வரிசையில் கலந்திருந்தார். இந்த ஊர்வலத்தின் அறுவடையாக ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி கடந்த பொதுத்தேர்தலில் மூன்று எம்.பிக்களை முதல்முறையாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றது. இது மே தினத்துக்கான இன்னொரு வரலாறு.
இதனை எழுதும்போது, 1960-70களில் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற தொழிலாளர் தின ஊர்வலங்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போது தமிழர் மத்தியில் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், சீன கம்யுனிஸ்ட் கட்சி ஆகியவையே தொழிலாளர் தின கொண்டாட்டங்களை இங்கு நடத்தின. இவை ஒன்றுடன் ஒன்று மோதாத வகையில் இவைகளின் ஊர்வலத்துக்கான பாதைகளும், கூட்டத்துக்கான இடங்களும் பொலிசாரால் நிர்ணயிக்கப்படும்.
சீன கம்யுனிஸ்ட் கட்சியின் ஊர்வலங்கள் எப்போதும் கவர்ச்சியாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். மிக அதிகமானோர் இதிலேயே பங்குபற்றுவர். இப்பத்தி எழுத்தாளர் ஓர் ஊடகர் என்ற வகையில் இதனை செய்தியாக எழுதியதுண்டு. இந்த ஊர்வலங்களில் ஒலிபெருக்கி மூலம் முழங்கப்படும் சுலோகங்கள் பார்ப்போரை சுண்டியிழுப்பதாக அமைந்திருக்கும்.
ஊர்வலத்தின் முன்வரிசையில் செல்பவர் ஒலிவாங்கியில் சுலோகத்தின் முதல் இரு வரிகளைச் சொல்ல பின்னால் செல்பவர்கள் மிகுதி இரு வரிகளையும் வானதிரச் சொல்வர். சமகால அரசியல், மக்கள் வாழ்வியல் சம்பந்தப்பட்டவையாக இவை அமைந்திருப்பதால் பெரும் கூட்டம் இதனைக் கேட்பதற்கு வீதிகளில் கூடியிருக்கும்.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகத்துக்கு முன்னால் ஊர்வலம் செல்லும்போது முன்னால் செல்பவர் - விண்ணன் பொன்னன் - என்று சொல்ல, பின்னால் செல்பவர்கள் - பண்ணினதென்ன - என்று முடிப்பர். தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள்கூட ரசிப்பதாகவே இது அமைந்திருக்கும்.
தேநீர் கடைகளின் முன்னால் ஊர்வலம் செல்லும்போது - போகட்டும் போகட்டும் - என்று முன்னால் செல்பவர் சொல்ல, பின்னால் செல்பவர்கள் - போத்திலும் பேணியும் - என்பர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போத்திலிலும், உடைந்த பேணிகளிலும் தேநீர் வழங்குவதை கண்டிக்கும் சுலோகம் இது.
இவ்வாறு பெயர் பெற்ற சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் இயங்கு தலைவராக நீண்டகாலம் இருந்தவர் (அமரர்) கே.ஏ.சுப்பிரமணியம். இவருக்குச் சவாலாக அமைந்தது 1969ம் ஆண்டு தொழிலாளர் தினம். இதே தினத்தில் பௌத்தர்களுக்கான வெசாக் தினமும் வந்ததால், அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசின் பிரதமர் டட்லி சேனநாயக்க தொழிலாளர் தினத்தை மே மாதம் 2ம் திகதி என்று பிரகடனம் செய்தார். சிங்கள கட்சிகள் மட்டுமன்றி டட்லியின் தேசிய அரசை ஆதரித்து வந்த தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரசும்கூட இதனை ஏற்றக்கொண்டன. ஆனால், சீனக் கம்யுனிஸ்ட் கட்சி மட்டும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
எவ்வாறாயினும், மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் இடம் பெறுமென இக்கட்சியின் தலைவர் கே.ஏ.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். அப்போது வடமாகாண பொலிஸ் அதிபராக ஆர்.சுந்தரலிங்கம் பணியாற்றிக் கொண்டிருந்தார். பொதுமக்களோடும், ஊடகங்களோடும் நல்லுறவு பேணியவராக இவர் இருந்தும் சீனக் கம்யுனிஸ்ட் கட்சியினரின் தொழிலாளர் தின ஏற்பாடுகள் பற்றி எதனையும் இவரால் கண்டறிய முடியவில்லை.
இக்கட்சி அக்காலத்தில் சங்கானையில் நிற்சாமம் என்ற இடத்திலும், கொடிகாமத்தில் மந்துவிலிலும், சுன்னாகத்திலும் வலுப்பெற்றிருந்தது. இதனால் இவ்விடங்களிலேயே தொழிலாளர் தின நிகழ்வு இடம்பெறலாம் என்ற சந்தேகத்தில் வேறு மாகாணங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். யாழ்.நகர் பகுதியில் பொலிஸ் கண்காணிப்பு குறைவாகவே இருந்தது.
அன்றைய தினம் பிற்பகல் சுமார் ஐந்து மணியளவில் யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரிலும் அதன் முன்னாலுள்ள வின்சர் தியேட்டரிலும் பகல் இரண்டு மணி படக்காட்சி (மெட்னி N~h) முடிந்து வெளியே வந்த ஆயிரக்கணக்கானோர் திடீரென தங்கள் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குட்டைகள் அளவான சிவப்புத் துணிகளை உயர்த்திப் பிடித்தவாறு, கோசங்கள் எழுப்பிக் கொண்டு தொழிலாளர் தின ஊர்வலத்தை ஆரம்பித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர்.
கே.ஏ.சுப்பிரமணியம் எங்கிருந்து வந்தாரோ தெரியாது, ஊர்வலத்தின் முன்னால் பாரிய பதாதையுடன் ஓட்டமாகச் செல்ல, ஊர்வலத்தினர் சிவப்புக் கொடிகளை ஏந்தியவாறு அவரின் பின்னால் நகரின் மையப் பகுதிக்குள் நுழைந்தனர். சில நிமிடங்களில் மலாயன் கபேயைத் தாண்டி முட்டாசுக் கடை சந்தியூடாக முற்றவெளியை நோக்கி அண்மிக்கையில் வாகனங்களில் கொண்டு வரப்பட்ட பொலிசார் இறக்கப்பட்டனர். அவர்களின் குண்டாந்தடித் தாக்குதலால் ஊர்வலத்தின் ஒரு பகுதி சிதறியது.
இந்தத் தாக்குதலில் திரு. சுப்பிரமணியம் மோசமாகக் காயப்பட்டு யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாராயினும் பொலிஸ் காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார்.
அதேசமயம், தங்களுடைய குறியை ஊர்வலகாரர் மறந்துவிடவில்லை. நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலை நோக்கிச் சென்ற இவர்கள் அங்கு சிறு கூட்டம் நடத்தி உரையாற்றி விட்டு, தொழிலாளர் தின பிரகடனத்தை வாசித்தபின் கலைந்தனர். இந்த நிகழ்வு, அன்றைய டட்லி சேனநாயக்க அரசுக்கும், பௌத்த மத பக்தர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்தது. இலங்கை ஊடகங்களைவிட இந்திய ஊடகங்கள் இதற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்திருந்தன. பி.பி.சி. மும்மொழிகளிலும் இச்செய்திக்கு அன்றிரவு பிரபல்யம் கொடுத்தது.
இதனை விபரமாக இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு. இந்த வருடமும் வெசாக் வாரத்திலேயே தொழிலாளர் தினமும் அமைந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வில் தங்களோடு இணையுமாறு அதன் தலைவரான சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சில தினங்களுக்கு முன்னர் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை நிராகரித்த ரணில், இதற்குத் தெரிவித்த காரணம் பின்வருமாறு: 'ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி இன்று வெசாக் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனால் இப்பிரதேசத்திலுள்ள பல நாடுகள் மே முப்பதாம் திகதியில் தொழிலாளர் தினத்தை அனு~;டிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியும் அவ்வாறே" என்று சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பிய பதிலில் ரணில் சுட்டியுள்ளார்.
1969ல் தொழிலாளர் தினத்தை மே மாதம் 2ம் திகதிக்கு மாற்றிய டட்லி சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் இன்றைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. மதம் பிடித்த அந்த அரசியல் போக்கு இன்றும் அவ்வாறேதான்.

Post a Comment