எபோலா வைரஸ் பரவல்: காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான எல்லையை மூடியது உகாண்டா
எபோலா நோய் பரவல் காரணமாக , காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான (டி.ஆர்.சி.) தனது எல்லை மூடப்பட்டுள்ளதாக உகாண்டா அதிகாரிகள் நேற்றுப் புதன்கிழமை அறிவித்தனர்.
காங்கோ நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த உகாண்டா சுகாதாரப் பணியாளர்களிடையே வைரஸ் பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி ஜெசிகா அலுபோ தலைமையிலான நாட்டின் எபோலா பணிக்குழு, எல்லையை உடனடியாக மூடுவதற்கான முடிவை எடுத்தது.
மே 15 அன்று நோய் பரவல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, பாதிக்கப்பட்ட காங்கோ நாட்டினர் எல்லையைக் கடந்திருந்தனர்.
உகாண்டாவின் சுகாதார அமைச்சகத்தின் நிரந்தரச் செயலாளர் டாக்டர் டயானா அட்வைன், நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், சரக்குகள் அல்லது பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்ட அவசர காலங்களில் மட்டுமே காங்கோ எல்லையைக் கடந்து பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அவசரகால சூழ்நிலைகளில் காங்கோவிலிருந்து உகாண்டாவிற்குள் நுழையும் எவரும் 21 நாட்களுக்குக் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சுகாதார அவசரநிலை, காங்கோ ஜனநாயகக் குடியரசின் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட 17வது எபோலா பரவலாகும்.
இது பண்டிபுக்யோ வகை வைரஸால் ஏற்பட்டது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நோயின் குறிப்பிட்ட வகைக்கு தற்போது தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை என்பது நினைவூட்டத்தக்கது.

Post a Comment