எச்சரிக்கிறார் செல்வம்!

 


தேசிய மக்கள் சக்தி அரசே மாகாண சபைகளைக் கைப்பற்றும்  என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வளைகுடா போர் நிறுத்தப்பட்டு சுமூகமான சூழல் ஏற்பட்டால், அரசாங்கம் நிச்சயமாக மாகாண சபைத் தேர்தலை நடத்தப் பார்க்கும் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். அந்த வகையிலே இன்று பிரஜாசக்தி மூலமாக கிராம ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மற்றவர்களை அரவணைத்துச் செல்லாமல் தனித்து செயற்படுகின்றனர். 

அடுத்த வருடங்களில் ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்திற்கும் மக்களின் ஆதரவு எந்தளவுக்கு இருக்கும் என்ற சந்தேகம் இருக்கிறது. ஏனெனில், நிலக்கரி ஊழல் உட்பட பல்வேறு முறைகேடுகளால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது. இத்தகைய நிலையில், அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மாகாண சபைகளைத் தன் வசப்படுத்த முயற்சிக்கும். மாறாக அடுத்த ஆண்டு தேர்தலை நடத்துவார்களே ஆனால் அவர்கள் நினைப்பது போல் பல மாகாண சபைகளை இழக்க நேரிடும்.

வடக்கு-கிழக்கில் நாங்கள் ஒற்றுமையாக மக்கள் விரும்பும் செயலினை மேற்கொள்ளவில்லையாயின், நாம் தேசியம் பேசி எதுவித பயனும் இல்லை. நாம் மக்களைக் காப்பாற்றுகிறோம் என்று நாம் உதட்டோரமே பேசுகின்றோம் என அர்த்தப்படும்.

எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால்,  தேசிய மக்கள் சக்தி அரசே மாகாண சபைகளைக் கைப்பற்றும் சூழல் உருவாகும். குறிப்பாக அவர்கள் எப்போதும் ஒற்றுமையாக வரமாட்டார்கள் என்ற விரக்தியின் காரணமாக அரசிற்கு மக்கள் வாக்களிப்பார்கள். இதனால் தேசிய மக்கள் சக்தியானது மாகாண சபைகளை கைப்பற்றுகின்ற அபாய நிலையை ஏற்படும். அவ்வாறான நிலை ஏற்படுமாயின் தேசியம் பேசும் அனைத்துக் கட்சிகளும் அருகதையறற்வர்கள் என்ற நிலைக்கும், மக்கள் எங்களை புறக்கணித்துள்ளனர் என்ற நிலைக்கும் உட்படுவோம்.

அவ்வகையிலே எங்களது போராளிகள் மற்றும் பொதுமக்களின் தியாகத்தை நாங்கள் துச்சமாக மதித்திருக்கிறோம் என்றும் மக்கள் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற அபாய நிலைக்கு நாம் எப்போதும் செல்லக்கூடாது என்பது எனது கருத்தாகும்.

எனவே சுயநல செயல்பாடுகளை விட்டுவிட்டு, தேர்தல் ஒற்றுமையாக மட்டும் இல்லாமல், மக்களின் அனைத்து விடயங்களிலும் நாங்கள் ஒரு சக்தியாக மாற வேண்டும். இல்லையெனில், தேசியம் பேசும் கட்சிகள் மக்களால் நிராகரிக்கப்படும் என்பதை ஒரு எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

No comments