உலகம் அமைதியின் செய்தியைக் கேட்க வேண்டும் - போப்


உலகம் அமைதியின் செய்தியைக் கேட்க வேண்டும் என போப் லியோ XIV கூறுகிறார்.

நேற்றுப் புதன்கிழமை அல்ஜீரியாவிலிருந்து கேமரூனுக்குத் தன்னுடன் விமானத்தில் பயணம் செய்த போப் லியோ XIV  செய்தியாளர்களிடம் பேசியபோது, இன்று உலகம் கேட்க வேண்டிய செய்தி அமைதி மற்றும் உரையாடல் பற்றியது என்று கூறினார்.

உலகெங்கிலும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவரான போப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். டிரம்ப், எண்ணற்ற சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் பொது அறிக்கைகள் மூலம் லியோவை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

போர்கள், குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான போர்கள் மீதான லியோவின் தளராத விமர்சனத்தாலும், மிக அண்மையில் ஈரான் மீதான அதன் தாக்குதலாலும் டிரம்பின் கோபம் தூண்டப்பட்டுள்ளது.

போப்பாண்டவர் புதன்கிழமை கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. டிரம்ப் பற்றியும் அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ஜனாதிபதியைத் தவிர, சமீபத்தில் கத்தோலிக்க மதத்திற்கு மாறிய துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸும், லியோ மீது தொடர்ச்சியான பகைமையைக் கொண்டிருப்பதுடன், இந்த சமீபத்திய மோதலில் டிரம்பை பகிரங்கமாக ஆதரித்தும் பேசினார்.

லியோ, தான் ஒரு அரசியல்வாதி அல்ல என்றும், நம்பிக்கையுள்ள மனிதர் என்றும் கூறியுள்ளார். மேலும்,  டிரம்புடன் விவாதிக்க தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

அல்ஜீரியாவில், லியோ புனித அகஸ்டினின் பழமையான இல்லத்திற்குச் சென்று, எல்லா மக்களிடையேயும் ஒற்றுமை மற்றும் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் மதித்தல் என்ற அந்த மாபெரும் இறையியலாளர் மற்றும் தத்துவஞானியின் செய்தியைப் பற்றிப் பேசினார்.

தற்கால முஸ்லிம் பெரும்பான்மை அல்ஜீரியாவில் அகஸ்டினின் பங்களிப்பை மேலும் சுட்டிக்காட்டிய அவர் அனைவராலும் தங்கள் மண்ணின் மாபெரும் புதல்வர்களில் ஒருவராக போற்றப்படுகிறார் என்றும், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு சாத்தியமான பாலமாகத் திகழ்கிறார் என்றும் கூறினார்.

அல்ஜியர்ஸின் பெரிய மசூதிக்குச் சென்றது குறித்துப் பேசிய லியோ, நமக்கு வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு வழிபாட்டு முறைகள், வெவ்வேறு வாழ்க்கை முறைகள் இருந்தாலும், நாம் அமைதியாக ஒன்றாக வாழ முடியும் என்று சொல்வதற்கு, அந்த மசூதிக்குச் சென்றது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று நான் நினைக்கிறேன் என்றார்.

ஆகவே, அத்தகைய ஒரு பிம்பத்தை முன்னிறுத்துவது என்பது, இன்றைய உலகம் கேட்க வேண்டிய ஒரு விடயம் என்று நான் கருதுகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

No comments