பொதுவெளியில் பிளவுண்டு அரங்கேறும் தமிழ்த் தேசியத்தின் தலைவிதி - பனங்காட்டான்


தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி சாண் ஏற முழம் சறுக்குவதுபோல் காணப்படுகிறது. தமிழரின் தலையாய கட்சி என அடையாளம் காணப்படும் தமிழரசு உள்ளகப் பிளவுகளால் முறுகல் நிலையில் உள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எப்போதும்போல விட்டுக்கொடுக்காத தனிவழியில்;. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எவரையும் நம்பாத நிலையில் பேசிப்பேசி  உழல்கிறது. 

தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை எதிர்ப்பதற்கு இன்னும் இறுக்கமான கட்டமைப்பை உருவாக்குவதற்காக தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேசி வருகிறது.

தமிழரசு கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பொதுவெளியில் பேசுவதை தவிருங்கள் என கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் பேண்டுகோள். 

வடக்கு கிழக்கு கட்சிகளை ஒழுங்குக்குள் கொண்டு வாருங்கள் என்று தமிழரசு கட்சியிடம் இந்திய துணை ஜனாதிபதி இராதாகிரு~;ணன் கோரியுள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளிடையே தீர்வு காண முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்துவிட்டதென தமிழரசுக் கட்சி குற்றச்சாட்டு. 

இலங்தை தமிழ் மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும் கரிசனையுடனும் அர்ப்பணிப்புடனும் இருப்பதாகவும் அதன் துணை ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளிடம் நேரடியாகத் தெரிவிப்பு.

மேற்குறிப்பிட்ட செய்திகளின் தலைப்புகள் கடந்த ஒரு வாரத்துக்குள் தமிழ் ஊடகங்களில் வெளிவந்தவை. இவை வெவ்வேறாக, வெவ்வேறு தினங்களில் வெளிவந்திருந்தாலும் இவை அனைத்துமே ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடையவை. 

தங்களை தமிழ்த் தேசிய கட்சிகள் என்று பெருமையுடன் குறிப்பிட்டுச் சொல்லும் தமிழரசு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை சம்பந்தப்பட்டதாக சொல்லப்பட்ட விடயங்கள் இவை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை தலைமையாகக் கொண்டது. புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய மூன்று முன்னாள் ஆயுதக் குழுக்களும் இணைந்த அரசியல் அமைப்பு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. இப்போது மேலும் இரண்டு அமைப்புகள் கூட்டணியோடு சேர்ந்து இயங்குகின்றன. 

ஆக, தமிழரசு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற மூன்றும் எவ்வாறு ஒற்றுமையாக தேசிய நலன் சார்ந்து இயங்குகின்றன என்பதை இப்பத்தியின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட செய்தித் தலைப்புகள் ஊடாக புரிந்து கொள்ள முடியும். 

அண்மைக் காலத்தில் தமிழரசுக் கட்சியுடன் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மிக நெருக்கமாக பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. மாகாண சபை தேர்தல் நடைபெறுமென்ற எதிர்பார்ப்பில் இவர்களுக்கிடையே ஓர் இணைப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்டது. இணைப்பு ஏற்பட்டதுபோல இரு தரப்பிலிருந்தும் அவ்வப்போது அறிவிப்புகளும் வெளிவந்தன. 

ஆனால், இப்போது கூட்டணி விடுத்திருக்கும் அறிவிப்பை பார்க்கும்போது அவ்வாறு இணைப்பு இன்னும் ஏற்படவில்லை, அல்லது தமிழரசுக் கட்சியை இன்னும் முழுமையாக கூட்டணி நம்பவில்லையென்பது தெரிய வருகிறது. இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க தாங்கள் தமிழரசுடன் பேசி வருவதாக கூட்டணியினர் தெரிவித்திருப்பதை பார்க்கும்போது, ஏதாவது தேர்தல் வந்தால்தான் குருவிச்சை ஒட்டு இவர்களுக்குள் வரும்போலத் தெரிகிறது. 

கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி தங்களைத் தூக்கியெறிந்ததை கூட்டணியினர் இன்னும் மறக்கவில்லை போலும். தமிழரசுக் கட்சி பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களுக்கும் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரனுக்குமிடையில் நீண்டகாலமாக நிலவி வரும் ஷஅரசியல் பகைமை|யும் இதற்கொரு காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. 

தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் வேறுபாடுகளை பொதுவெளியில் பேசுவதைத் தவிர்க்குமாறு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் விடுத்திருக்கும் வேண்டுகோள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. உட்கட்சி விவகாரங்களை ஊடகங்கள் ஊடாக கசிய விட்டு, பொதுவெளியில் அதனை சர்ச்சையாக்கி வருபவர் யார் என்பது சி.வி.கே.சிவஞானம் அவர்களுக்குத் தெரியும். கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனே அந்த நபர். நேரடியாக தனது கருத்தை அவரிடம் தெரிவிக்காது பொதுவெளியில் இதனைக் கொண்டு வந்து கட்சியின் உட்பிளவை பதில் தலைவரே மேலும் பகிரங்கமாக்கியுள்ளார். 

தமிழரசுக் கட்சிக்குள் இன்று ஏற்பட்டிருக்கும் பிளவு நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும்கூட தீர்க்க முடியாத ஒன்றாக நீட்சி பெற்றுள்ளது. கட்சி பல்வேறு காரணிகளால் துண்டு துண்டாகியிருக்கிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டுமானால் உயர்மட்ட பதவிகளில் மக்கள் கருத்துக்கும் விருப்புக்கும் ஏற்றவாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இது சி.வி.கே. அவர்களுக்குத் தெரியாததல்ல. பொதுவெளியில் அறிக்கை விடுவதன் மூலம் பொதுவெளியில் பேசுவதை தடுக்க முடியாதென்பதை கட்சியின் இரு கூறுகளும் நன்கு தெரிந்துள்ளன்.

இவ்வாறு அத்திவாரத்தில் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியிடம், வடக்கு கிழக்கு கட்சிகளை ஒழுங்குக்குள் கொண்டு வாருங்கள் என்று இந்திய துணை ஜனாதிபதி இராதாகிரு~;ணன் வேண்டியிருக்கிறார் என்ற செய்தியை படிக்கும்போது நகைச்சுவையாகத் தெரிகிறது. தான் போக வழி தெரியாத மூஞ்சுறிடம் விளக்குமாறையும் இழுக்குமாறு கேட்கப்பட்டது போன்றது இந்த வேண்டுகோள். பாவம் இந்திய துணை ஜனாதிபதி. செய்ய முடியாத ஒரு பொறுப்பை எதற்காகத்தான் தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைத்தாரோ தெரியாது. 

தமிழ்த் தேசிய கட்சிகளிடையே தீர்வு காண முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்துவிட்டதென தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது என்பது அடுத்த செய்தித் தலைப்பு. தமிழரசுக் கட்சியின் இந்த அறிக்கையில் அதன் பதில் தலைவர் சிவஞானமும் பதில் செயலாளர் சுமந்திரனும் கூட்டாக ஒப்பமிட்டுள்ளது கவனத்துக்குரியது. தமிழரசுக்கும் தமிழ் காங்கிரசுக்குமிடையில் பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் போன்ற ஒவ்வாமை இன்று நேற்று உருவானதல்ல. அதன் வெளிப்பாடு இப்போதும் உலாவி வருகிறது. 

சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழரசின் பதில் தலைவர் சிவஞானத்தை நாடிச் சென்று இரு தரப்பையும் ஓர் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி எடுத்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால், அப்போது தமிழரசுக் கட்சி கஜேந்திரகுமாரின் வேண்டுகோளை தூக்கி எறிந்தது. அதற்கு தங்களுக்கு பொருத்தமான காரணத்தையும் தமிழரசுக் கட்சி தெரிவித்திருந்தது. 

இருப்பினும், பொதுவெளியில் பொதுவானவர்கள் சந்திப்பில் முக்கியமாக வெளிநாட்டு ராஜதந்திரிகள், இந்திய அரசின் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகளில் தமிழ்க் காங்கிரசும் அதன் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் மற்றைய தமிழ்த் தேசிய கட்சிகளோடு இணைந்து பங்கேற்று வருகிறது. எனினும், அது தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதுமே விலகியதில்லை. 

தற்போது தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அனைத்துத் தமிழ் தேசிய கட்சிகளையும் இணைத்து மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணிகள் பங்குபற்றியே வருகின்றன. இவ்வேளையிலும்கூட தங்களது தனிப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் விலக விரும்பாததே அவர்களின் போக்கு. 

இதனையே சுட்டிக்காட்டும் தமிழரசுக் கட்சி தங்களுக்கிடையே நீண்டகாலமாக இருக்கும் அரசியல் கசப்புணர்வை உட்புகுத்தி தமிழ்த் தேசிய கட்சிகளிடையே ஏற்பட்டு வரும் ஒற்றுமையை தமிழ்க் காங்கிரஸ் சிதறடித்து விட்டதாக  குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு காலமே நின்று பதில் சொல்லும் கடப்பாடுடையது. 

இலங்கைக்கு குறுகிய விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிரு~;ணன் பல தரப்பட்டவர்களையும் சந்தித்துப் பேசினார். தமிழ்த் தேசிய தரப்பில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகிய மூன்றையும் ஒன்றாகவே சந்தித்தார். இலங்கை தமிழ் மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும், கரிசனையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படுவதாகவும் இவர் தெரிவித்தார்.

இது ஒன்றும் புதியவை அல்ல. பழைய பல்லவிதான். இந்தியாவின் உண்மையான கரிசனையும் அக்கறையும் தமிழ் மக்கள் மீது இருப்பின் இரு நாடுகளின் ஒப்பந்தம், 13ம் திருத்தம், மாகாண சபை தேர்தல் என்பவை கேட்பாரில்லாத அநாதையாகி இருக்க முடியாது. இப்போது எதுவுமே இல்லை என்ற நிலையில் வெற்று வார்த்தைகளால் எதையும் சொல்லி விடுவதில் அர்த்தமில்லை. 

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கை அரச உயர்மட்டத்திடம் தாம் எடுத்துக் கூறியிருப்பதாகவும் துணை ஜனாதிபதி இராதாகிரு~;ணன் தமிழர் தரப்பிடம் கூறியுள்ளார். அவ்வாறு அவர் கூறியிருப்பதற்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால், அது எந்தளவுக்கு உள்வாங்கப்படும் என்பதுதான் கேள்வி.

இலங்கையில் பொதுமக்கள் வாக்குகளால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது போன்ற நடைமுறை இந்தியாவில் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநில மக்களவை உறுப்பினர்களும் சேர்ந்தே ஜனாதிபதியையும், துணை ஜனாதிபதியையும் இந்தியாவில் தெரிவு செய்வர். அதாவது ஆட்சியிலிருக்கும் கட்சியைச் சார்ந்தவர்களுக்கே இப்பதவி கிடைக்கும். சொல்லப்போனால் நிறைவேற்று அதிகாரமில்லாத ஓர் அலங்காரப் பதவி என்றே இதனைச் சொல்ல வேண்டும். இதனைப் புரிந்து கொண்டால் துணை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இலங்கை அரசு எவ்வாறு செவிசாய்க்கும் என்பதை அறிந்து கொள்ள நேரம் எடுக்காது.

கடந்த ஒரு வாரத்தில் தமிழ்த் தேசிய பரப்பில் என்ன நடைபெறுகிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது. தமிழரசுக் கட்சி உள்ளக மோதலால் பொதுவெளியில் மிக மோசமாக பிளவுபட்டுள்ளது. தமிழ்க் காங்கிரஸ் கட்சி எப்போதும் போல் தனிவழியிலேயே பயணிக்கிறது. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி இன்னமும் பூரணமாக தமிழரசுக் கட்சியை நம்பாது தொடர்ந்து பேசிக் காலத்தை கழிக்கிறது. சகல தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழர் நலன் சார்ந்து இன்னமும் இயங்க ஆரம்பிக்கவில்லை என்றே தோன்றுகிறது. அதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரியவில்லை. 

No comments