ரில்வின் குறிப்பிடும் மாகாண சபை ''முறைமை'' என்பது மாகாண சபை ''தேர்தல்'' என்பதல்ல! பனங்காட்டான்
மாகாண சபைகள் அமைப்பு ஜே.வி.பி.யின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தவைகளை முழுமையாக நிறைவேற்ற உதவவில்லையென்று குற்றஞ்சாட்டியுள்ள இதன் செயலர் ரில்வின் சில்வா, இதற்கான மாற்றீட்டைத் தேடும்வரை மாகாண சபைகள் முறைமை அவ்வாறே இருக்குமென சுட்டியிருப்பது ஆளுனர்களின் நிர்வாகத்தையே தவிர தேர்தலுக்கான உறுதிமொழி அல்ல.
மாகாண சபைத் தேர்தல் விரைவில் இடம்பெறுமென்ற அதீத நம்பிக்கையில் அதனை நோக்கி வேகமாகப் பயணத்தை ஆரம்பித்த தமிழ்த் தேசிய கட்சிகள் எனப்படுபவர்கள் இப்போது ஏனோ ஒரு சோர்வு நிலையில் காணப்படுவதுபோல் தெரிகிறது.
தேர்தலை மையப்படுத்தியும், தலைமைக் கதிரையில் கண் வைத்தும் ஒற்றுமையை நோக்கி முன்னெடுத்த முயற்சிகள் பிசுபசுத்துவிட்டதுபோல் தெரிகிறது. இப்போது இவர்களின் கவனத்தை மிக இலாவகமாக புதிய அரசியலமைப்பின் பக்கம் திருப்பி விட்டுள்ளது அநுர குமரவின் தேசிய மக்கள் அரசு.
இந்த அரசாட்சியை அநுர குமர என்ற ஜனாதிபதியின் தலைமையிலானது என்று சொன்னாலும், அநுர குமர மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி எப்போதும் உறுதியாகக் கூறியதாக இல்லை. கடந்த நவம்பரில் தம்மைச் சந்தித்த தமிழரசுக் கட்சியினரிடம் அனைவரும் ஏற்கும் அரசியல் தீர்வொன்று புதிய அரசியலமைப்பினூடாக மேற்கொள்ளப்படும் என்று கூறி, தமிழரசுக் கட்சியினரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
மாகாண சபைத் தேர்தலோ புதிய அரசியல் அமைப்போ எதுவாயினும் ஜனாதிபதி வழியாக அநுர குமரவினால் முடிவெடுக்க முடியாதவை என்பது தமிழரசுக் கட்சியினருக்கு மட்டுமன்றி அனைத்துத் தரப்பினருக்கும் தெரியும்.
அண்மைக் காலங்களில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் அழைப்பின் பேரில் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அங்கு சென்றிருந்தார். கொழும்பிலுள்ள சில வெளிநாடுகளின் தூதுவர்கள் ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகம் சென்று ரில்வின் சில்வாவுடன் உரையாடி வருகின்றனர். சில பிரதான ஊடகங்கள் இதனை செவ்வி கண்டு ஆட்சிபீடக் கொள்கைகளை விலாவாரியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருப்பது தேசிய மக்கள் சக்தி அரசும் அதன் ஜனாதிபதியும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் - மொத்தத்தில் இந்த அணியிலுள்ள எவருமே ரில்வின் சில்வாவின் விரலசைவின்றி எதனையும் செயற்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர் என்பது.
அப்படியெனில் தமிழரசுக் கட்சியின் குழுவொன்று ரில்வின் சில்வாவை சந்தித்து இனப்பிரச்சனைக்கான தீர்வு, மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு விடயங்களை பேசுவதற்கு ஏன் விரும்பவில்லையென்று தமிழரசின் உயர்மட்ட பிரமுகர் ஒருவரிடம் இ;ப்பத்தியாளர் அண்மையில் கேட்டார். பதிலளித்த அவர், உண்மைதான். அதுபற்றி நாங்கள் யோசிக்கத்தான் வேண்டும். விரைவில் ஒரு முடிவெடுப்போம் என்று பட்டும்படாமலும் கூறினார். இது அவரது வழமையான பிடிபடாத பதில். இதற்கு மேல் எதுவும் சொல்லி அவரை சிக்கலில் மாட்ட நான் விரும்பவில்லை.
ஆனால், அடுத்த சில நாட்களில் ரில்வின் சில்வாவின் செவ்வி ஒன்று ஊடகங்களில் வெளியானது. இந்தச் செவ்விக்கு ஈழநாடு பத்திரிகையின் தலையங்கம் பின்வருமாறு இருந்தது: இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டும்வரை மாகாண சபை முறைமை நீக்கப்படாது - ரில்வின் சில்வா திட்டவட்டம், என்றிருந்தது இத்தலையங்கம்.
இனப்பிரச்சனைத் தீர்வுக்கு நிலையான மாற்றுத் தீர்வை கண்டுபிடிக்கும்வரை மாகாண சபை முறைமை நீக்கப்படாது என்று மிக விளக்கமாக அவர் இங்கு தெரிவித்திருந்தார். தொடர்ந்து இதுபற்றிக் குறிப்பிடுகையில் இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வை உருவாக்க வேண்டுமென்ற எமது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த நோக்கத்தை மாகாண சபைகள் நிறைவேற்ற உதவவில்லையென்று ஒரு குற்றச்சாட்டை இங்கே சுட்டியிருந்தார்.
ரில்வின் சில்வா அத்துடன் நிறுத்தவில்லை - எதுவாயினும் ஒரு சிறந்த மாற்றுத் தீர்வை தேடும்வரை மாகாண சபைகள் அவ்வாறே இருக்கும். அதனை எட்டாமல் மாகாண சபையை நாம் அகற்றப்போவதில்லையென்று மிகவம் விளப்பமாகவும் இங்கு தெரிவித்திருந்தார்.
முக்கியமான மூன்று விடயங்களை மிகவும் இலகுவான நடையில் எவரும் இலகுவாகப் புரியுமாறு ரில்வின் தெரிவித்திருந்ததை கவனிக்க வேண்டும்.
முதலாவது: இனப்பிரச்சனைக்கு நிலையான ஒரு மாற்றுத்தீர்வை கண்டுபிடிக்கும்வரை மாகாண சபை முறைமை (கவனிக்கவும் - முறைமை) நீக்கப்படாது என்பது. (அப்படியானால், 1987 ராஜிவ்-ஜே.ஆர். ஒப்பந்தத்தில் உருவான மாகாண சபை இனப்பிரச்சனைத் தீர்வுக்காக கொண்டு வரப்பட்டது என்பதை ஜே.வி.பி. ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தது என்பதும் இதற்கு மாற்றுத் தீர்வு காணப்பட வேண்டுமென்று ஜே.வி.பி. தொடர்ந்தும் விரும்புகிறது என்பதும் இங்கு புலனாகிறது)
இரண்டாவது: தற்போதுள்ள மாகாண சபை முறைமை இனப்பிரச்சனைக்கு சரியான ஒரு தீர்வை உருவாக்க வேண்டுமென்ற ஜே.வி.பி.யின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற உதவவில்லையென்று கூறியுள்ளார். (கடந்த ஒன்றேகால் வருடங்களாக மாகாண சபை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் கால அறிக்கைகளை நிறைவேற்ற உதவவில்லையென்பதே இந்தக் குற்றச்சாட்டு. அப்படியானால் மாகாண சபைகள் இருப்பதில் என்ன பயன் என்று ரில்வின் சில்வா கேட்பது புரிகிறது).
மூன்றாவது: ஒரு சிறந்த மாற்றுத் தீர்வை இதற்குத் தேடும்வரை மாகாண சபைகள் அவ்வாறே இருக்கும் என மிக அழுத்தம் திருத்தமாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அதாவது மாற்றுத் தீர்வில் மாகாண சபைகள் இருக்காது என்பது இதனூடாக வெளிப்படையாக புலப்படும் தகவல். (இதுதான் இந்தச் செவ்வியில் அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் முத்தாரம் எனலாம்).
இதனைச் சற்று ஆழமாகப் பார்க்கின் 1987 ஒப்பந்த காலத்திலிருந்து விரிந்து செல்ல வேண்டிய பலவற்றை வரிவரியாகக் கூற வேண்டும். ஆனால் அதற்கு இந்தப் பத்தி போதாது. எனினும், சிலவற்றை தொட்டுச் சென்றால் அவற்றை உள்நோக்கலாம்.
1987 ராஜிவ்-ஜே.ஆர். ஒப்பந்தத்தை வீராவேசமாக எதிர்த்து களமாடியவர்கள் ஜே.வி.பி.யினர். 1989வரை நீண்டு இத்தொடரில் இடம்பெற்ற வன்செயல்கள், தீ வைப்புகள், படுகொலைகள் தனி வரலாற்றைக் கொண்டவை. இரு நாடுகளின் ஒப்பந்தத்தை எதிர்த்தது என்பது அதில் பிரசவமான மாகாண சபை முறைமையை ஜே.வி.பி. முழுமையாக வெறுத்தது என்பதாகும். ஆக ஜே.வி.பியினர் ஆரம்பத்திலிருந்து மாகாண சபையை எதிர்த்து வந்தனர் என்பது வெளிப்படையானது.
மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போது அவர்களது அநுசரணையோடு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதனூடாக வடக்கு-கிழக்கு மாகாண சபைகள் ஒன்றாக இயங்க முடியாது தடை செய்தவர்களும் இவர்களே. எந்த வகையிலும் மாகாண சபைகள் இயங்கக் கூடாதென்பதை தங்கள் அடிப்படைக் கொள்கையாகவே ஜே.வி.பி. செயற்படுத்தி வந்ததென்பது பழங்கதையல்ல.
இவைகளினூடாக அறிந்து புரிந்து தெரிந்து கொள்ளக்கூடியதாகவிருப்பது, தேசிய மக்கள் சக்தி அரசின் தாயாகவும் தந்தையாகவும் விளங்கும் ஜே.வி.பி.யின் செயற்திட்டங்களில் மாகாண சபை என்பது வேண்டப்படாத ஒரு பிள்ளை. இது கருவுற்றபோதே அதனை கருக்கலைப்பு செய்ய 1987ல் இவர்கள் முயன்றனர். ஆனால், அப்போது அது சாத்தியமாகவில்லை. இப்போது அரச இயந்தி;ரத்தை தேர்தல் வழியாக கையேற்று ஜனநாயக வழியாக மாகாண சபையை இல்லாமல் செய்வதே இவர்களது இலக்காக உள்ளது.
இவ்வாறு கூறுவதற்கு முக்கிய சான்றாக இருப்பது ரில்வின் சில்வாவின் கூற்றுகள். அதாவது, இனப்பிரச்சனை தீர்வு எட்டும்வரை மாகாண சபை முறைமை நீக்கப்படாது என்ற இவரது அறிவிப்பில் ஷமுறைமை| என்ற சொல் சற்றுக் கவனிக்கப்பட வேண்டியது. இன்னும் ஆழமாக இச்சொற்பதத்தை ஆய்ந்து பார்க்கையில் மாகாண சபை ஷதேர்தல்| நீக்கப்படாது என்று அவர் கூறவில்லையென்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
மாகாண சபை முறைமை என்பது வேறு, மாகாண சபை தேர்தல் என்பது வேறு. தற்போது ஆளுனர்கள் நிர்வாகத்தில் அவைகள் இயங்குவதே மாகாண சபை முறைமை என்பது. மாகாண சபைகளுக்கு மாற்றுத் தீர்வு காணப்படும்வரை (அதாவது இல்லாமற் செய்யப்படும்வரை) தற்போதுள்ள ஆளுனர் ஆட்சியின் கீழ் மாகாண சபை முறைமை தொடர்ந்து இயங்கும் என்பதையே ஷஅந்த முறைமை மாற்றப்படாது| என்று ரில்வின் சில்வா கூறியுள்ளார். மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமென்று ரில்வின் சில்வா எங்கும் கூறியதாக இல்லை.
இவர் கூறும் ஷமுறைமை| என்ற சொல்லின் மறைபொருள் என்ன என்பதை புரியாதவர்கள் மாகாண சபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறப்போவதாக எண்ணி, முறைமையையும் தேர்தலையும் ஒன்றாக்கி தேர்தலுக்கு கட்டியம் கூற ஆரம்பித்துள்ளார்கள். இது அரசியல் அறியாமையா, அப்பாவி மக்களை ஏமாற்றும் அரசியல் சுத்துமாத்தா?

Post a Comment